மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்தது சந்தோஷ் ஜா பிரதமரிடம் தெரிவிப்பு!

இந்திய – இலங்கை இருதரப்பு நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்காக மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இலங்கையின் நலனுக்காக நாட்டின் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் உத்தேச கூட்டுத் திட்டங்களை விரைவுப்படுத்துவதற்கான வழி வகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி துறையில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், துறைமுகம், ரயில் பாதைகள் தொடர்பான கூட்டுத் திட்டங்கள் மற்றும் விவசாயம் மற்றும் கடற்றொழில் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும்  அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள கடன் மறுசீரமைப்பு  வசதிகளை விரிவுபடுத்தி நிவாரணப் பொருள்கள், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

திரவத்தன்மை சிக்கல்களைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவித்திட்டத்தை பெறுவதற்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,  2007 முதல் 2010 வரை இலங்கையில் சேவையாற்றிய காலத்தை நினைவு கூர்ந்ததுடன் இருதரப்பு நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்காக மீண்டும் ஒருமுறை கொழும்புக்கு விஜயம் செய்யக்கிடைத்தமையை பெரும் பாக்கியமாகக் கருவதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் நலனுக்காக நாட்டின் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படுவதும் இருநாடுகளின் தலைவர்களும் ஒப்புக்கொண்ட இந்திய – இலங்கை ஒத்துழைப்பின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அதன் 14 அம்ச வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தனது பணியாகும் என இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.