பொது வேட்பாளராக ரணிலைதவிர வேறு தகுதியான எவரும் இல்லை! ரங்கே பண்டார அடித்துக்கூறுகிறார்

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்குவதாக யார் தெரிவித்தாலும் தற்போதுள்ள செயற்பாட்டு அரசியலில் அதற்குத் தகுதியானவர் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாரும் இல்லை.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும். அதற்காக அந்தக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாடு வங்குரோத்து அடைந்தபோது நாட்டைப் பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. பல்வேறு காரணங்களைத் தெரிவித்துக்கொண்டு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் இருந்து நழுவிச்சென்றவர்கள் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப்போவதாகத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நாடு வங்குரோத்து அடைந்தபோது, தனி நபராக இருந்துகொண்டு அந்தப் பொறுப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.

அதேபோன்று நாட்டைக் கட்டியெழுப்ப சில கஷ்டமான தீர்மானங்களைத் தைரியமாக முன்னெடுத்தார். அதன் காரணமாகவே நாட்டை வங்குரோத்து நிலைமையில் இருந்து மீட்டு, மக்கள் ஓரளவேனும்  இயல்பு நிலைக்குத் திரும்ப முடியுமாகி இருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் அவருக்கும் இருக்கும் நீண்டகாலத் தொடர்புகள் காரணமாகவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமாகி இருக்கிறது.

இவ்வாறான நிலையில் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தற்போதுள்ள அரசியல்வாதிகளில் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர தகுதியான வேறு யார் இருக்கிறார் எனக் கேட்கிறோம்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராகக் களமிறங்கினால் அவருக்கு அனைத்து மக்களும் ஆதரவளிப்பர் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றால், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க முடியும் என அந்தக் கட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

என்றாலும் இதற்கு முன்னர் பொது வேட்பாளராகப் பலர் களமிறங்கி இருக்கின்றனர். அப்போது நாங்கள் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கிறோம்.

அதேபோன்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராகக் களமிறங்குவது நிச்சயமாகும். அது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் அவர்களின் இணக்கப்பாட்டை எமக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.