அன்று யுத்தத்தால் பறிபோன மனித உயிர்கள் இன்று வீதி விபத்துக்களால் பறிக்கப்படுகின்றன.

த. சுபேசன்
இலங்கையைப் பொறுத்தவரை கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக பெறுமதியான பல இலட்சம் மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.ஆனால் தற்போது யுத்தம் மௌனித்து விட்ட போதிலும் ஏதோவொரு வகையில் மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன.அதில் வீதி விபத்து பிரதான பங்கு வகிக்கின்றது.வீதி விபத்துக்களால் உலகில் 42செக்கன்களுக்கு ஓர் உயிர் காவு கொள்ளப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
வளர்ச்சியடைந்த நாடுகளில் வீதி விபத்துக்கள் குறைவாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை போன்ற நாடுகளில் வீதி விபத்துக்களால் வருடத்திற்கு மூவாயிரம் உயிர்கள் வரை காவு வாங்கப்படுகின்றன.அத்துடன் பெருமளவான சொத்து இழப்புக்கள் மற்றும் அங்கவீனம் ஆகியனவும் ஏற்படுகின்றது.
2023ஆம் ஆண்டு நவம்பர் 30திகதி வரையான புள்ளிவிபரப்படி இலங்கையில் 2023 ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 21ஆயிரத்து 953வீதி விபத்துக்களும்- இரண்டாயிரத்து 163 உயிரிழப்புக்களும் பதிவாகியிருப்பதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக மேற்படி 11மாத காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ஐந்தாயிரத்து 206பேர் படுகாயமடைந்து அதில் பலர் அங்கவீனமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 2023ஆம் ஆண்டு முதல் நான்கு மாத காலப்பகுதிக்குள் 8ஆயிரத்து 202 வாகன விபத்துக்களில் 709பேர் பலியாகியுள்ளனர்.அதில் 220பேர் மோட்டார்சைக்கிள் சாரதிகளாக காணப்படுகின்றனர்.அத்துடன்
வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 14ஆயிரம் வாகன விபத்துக்களில் 1500பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
வருட இறுதிப் பகுதி மற்றும் பண்டிகைக் காலங்களிலேயே இலங்கையில் அதிக வீதி விபத்துக்கள் பதிவாகி வருகின்றன.
நாட்டில் வருடம் ஒன்றிற்கு சராசரியாக 12ஆயிரம் உயிரிழப்புக்கள் நேர்கின்ற நிலையில் அதில் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் நான்கில் ஒரு பகுதியாக காணப்படுகிறது.அந்தவகையில் சராசரியாக நாட்டில் வருடம் ஒன்றிற்கு மூவாயிரம் பேர் வரையில் வீதி விபத்துக்களால் அநியாயமாக உயிரிழக்கின்றனர்.
இலங்கையில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 150வாகன விபத்துக்கள் பதிவாகின்ற நிலையில் அதனூடாக 7-8உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையான 11மாத காலப்பகுதியில் நாட்டில் வீதி விபத்துக்களால் 115சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களில் அதிகமானோர் 15வயதிற்கும் 44வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வீதி விபத்துக்களால் இடம்பெறுகின்ற உயிரிழப்புக்களில் மோட்டார்சைக்கிள் சாரதிகளே அதிகம் உயிரிழப்பதுடன்-மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகிய வாகனங்களே இலங்கையில் அதிகம் விபத்துக்குள்ளாகின்ற நிலைமையும் காணப்படுகிறது.
இலங்கையினுடைய வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்த காலத்திற்குப் பின்னர் விபத்துக்களால் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்றன.
குறிப்பாக ஏ9 மற்றும் ஏ32 உள்ளிட்ட பிரதான வீதிகள் கார்பெட் வீதிகளாக மாற்றியமைக்கப்பட்ட பின்னர் பாரிய வீதி விபத்துக்கள் பல பதிவாகியுள்ளன.
அத்துடன் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளாலும் வடக்கில் ஏராளமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக சொல்லவேண்டுமானால் யுத்த காலத்திற்கு சமாந்தரமாக தற்போதும் வடக்கில் வீதி விபத்துக்களால் இளம் உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடந்த மே மாதம் வடக்கு மாகாணத்தில் 16பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்திருப்பதுடன்-அதில் யாழ்.மாவட்டத்தில் மாத்திரம் 10பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக சனத்தொகை 800கோடியை தாண்டியுள்ள அதேவேளையில் உலக நாடுகளுக்கு இடையே  இடம்பெறுகின்ற பாரிய யுத்தங்கள்,உள் நாட்டு யுத்தங்கள் மற்றும் பாரிய தொற்று நோய்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் அதிகரித்த சனத்தொகையை ஈடு செய்து வருகின்றன.இலங்கையிலும் அவ்வாறே கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் இலட்சக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்பட்டன.அதில் வடக்கு மாகாணம் அதிக பாதிப்பை எதிர்கொண்டது.அதேபோன்று தற்போதும் வீதி விபத்துக்களால் பெரிதும் பாதிக்கப்படும் மாகாணங்களில் ஒன்றாக வடக்கு மாகாணம் காணப்படுகிறது.
மேல் மாகாணம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் விபத்துகள் இடம்பெற பிரதான காரணமாக காணப்படுகிறது.ஆனால் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை போதிய விழிப்புணர்வு இன்மை,மதுப்பாவனை,கட்டாக்காலிகள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதி முறைகளை மீறுகின்றமையே விபத்துக்கள் ஏற்பட பிரதான காரணங்களாக காணப்படுகின்றன.
தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள வரிக் கொள்கைகளுக்கு அமைவாக மோட்டார் வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.சாதாரண மோட்டார்சைக்கிள் கூட 7இலட்சம் ரூபாய் வரை விலை உயர்வடைந்துள்ளது. இருப்பினும் நாட்டில் வாகனப் பயன்பாடு குறைவடையவில்லை.
கடந்த வருடம் நாட்டில் எரிபொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்த வேளையில் வாகனப் பயன்பாடு பன்மடங்கு குறைவடையும் என கருதப்பட்டது. இருப்பினும் அந்தக் கணிப்பு நிலைமை ஓரிரு மாதங்களுக்கே பொருத்தமானதாக காணப்பட்டது.எரிபொருட்களின் விலை-வாகனங்களின் விலை அதிகரித்தாலும் நாட்டில் வாகனப் பயன்பாடு குறைவடையவில்லை.
இலங்கையில் அதிகளவானவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்ற போதிலும் நாட்டில் வாகனப் பயன்பாடு அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது.அதே போன்று வீதி விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களும் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிவேக நெடுஞ்சாலைகள் அதிகம் உள்ள போதிலும் அங்கு விபத்துக்கள் இடம்பெறுவது அரிதாகவே காணப்படுகிறது.ஏனென்றால் அங்கு வாகனங்களின் தரம், வீதிகளின் தரம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை வாகனங்களின் தரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் இல்லாத வாகனங்களே அதிகமாக விபத்துக்களில் சிக்குகின்றன.இலங்கையில் அரச திணைக்களங்களுடைய பயன்பாட்டில் உள்ள வாகனங்களும் இதே நிலைமையில் தான் காணப்படுகின்றன.குறிப்பாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உரித்தான பேருந்துகள் பல பாவனைக்கு ஏற்றவகையில் இல்லை என்ற கருத்துக்கள் நிலவி வருவதுடன்-அண்மையில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் சக்கரம்  கழன்றோடிய சம்பவம் ஒன்றும் இலங்கையில் பதிவாகியுள்ளது.
இலங்கையில் பாவனையில் உள்ள வாகனங்களுடைய தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியமானதொன்றாகக் காணப்படுகிறது.தனியாருடைய வாகனங்களுடன் -அரச வாகனங்களுடைய தரமும் உறுதி செய்யப்பட வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது.
இலங்கையில் தனியார்-அரச பேருந்துகளின் போட்டிகளால் அதிகளவான விபத்துக்கள் சம்பவித்திருப்பதுடன் பெறுமதியான அப்பாவி உயிர்கள் பலவும் காவு வாங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நீண்ட தூர சேவையில் ஈடுபடுகின்ற அரச மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ச்சியாக வீதியில் போட்டி போட்டு அப்பாவி மக்களுடைய உயிர்களை பணயம் வைத்து சாகசம் காட்டுகின்ற நிலைமை காணப்படுகிறது.
இவ்வாறான செயற்பாடுகளின் போது அரச மற்றும் தனியார் பேருந்துகளின் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது போக்குவரத்துப் பொலிஸாருடைய கடமை.
இலங்கையில் பெரும்பாலான பாலங்களில் அடிக்கடி விபத்துக்கள் சம்பவிக்கின்றன.
சாரதிகளின் அசண்டையீனம்-பாலங்களின் தன்மை ஆகியன இவ்வாறு அடிக்கடி விபத்துக்கள் சம்பவிக்க காரணமாக அமைகின்றன.இவ்வாறான அடிக்கடி விபத்துக்கள் சம்பவிக்கின்ற பாலங்களில் உரிய வேகக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியும்-விழிப்புணர்வு பதாகைகள் ஊடாகவும் ஓரளவிற்கு விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது நாட்டில் குடிகொண்டுள்ள போதைப்பொருள் பாவனை பாரிய விபத்துக்கள் இடம்பெற காரணமாக அமைகின்றன.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களிடம் பொலிஸார் இலஞ்சம் பெற்று விட்டு குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவதும் விபத்துக்கள் இடம்பெற காரணம் என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மதுப்பாவனையால் ஒருபுறம் விபத்துக்கள் நேர்ந்தாலும் வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் கால்நடைகளால் அதிக விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன.
இரவு வேளைகளில் கட்டாக்காலி மாடுகள் வீதிகளில் படுத்துறங்குவதால் இவ்வாறான பயங்கரமான விபத்துக்கள் நேர்ந்து மனித உயிர்கள் பறிபோவதுடன்-ஐந்தறிவு ஜீவன்களும் இறக்கின்றன.
இவ்வாறு வீதிகளில் கட்டாக்காலிகளாக விடப்படும் கால்நடைகளை பிடிப்பதுடன்-அதன் உரிமையாளரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பொலிஸாருடையதும்-உள்ளூராட்சி மன்றங்களுடையதும் கடமை.ஆனால் அந்தக் கடமைகளை சரிவர பேணாமையே இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி இடம்பெற வழிவகுக்கின்றது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தை மற்றும் மாசி மாதங்களில் வீதியில் நெல் உலர விடப்படுவதனை அவதானிக்க முடியும்.வடக்கு மாகாணத்தில் அறுவடை செய்யும் நெல்லை உலர விடுவதற்கான தளங்கள் மிகக் குறைவு.இதனால் விவசாயிகள் காபெற் வீதிகளில் நெல்லை பரவி உலர விடுகின்றனர்.இரவு வேளையில் கூட சில இடங்களில் நெல் உலரவிடப்படும் நிலை காணப்படுகிறது.இவ்வாறான அறியாமல் செய்யும் தவறுகளால் கடந்த வருடம் வடக்கு மாகாணத்தில் ஓரிரு மரணங்களும்-பல விபத்துக்களும் சம்பவித்துள்ளன.
நாட்டில் தற்போது வெளிநாட்டு பண வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
இதுவே இளைய சமுதாயம் வறுமையை உணராது சீரழிய மிகப்பெரிய காரணமாக சொல்லப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு மாகாணத்திற்கு புலம்பெயர் உறவுகள் ஊடாக கிடைக்கும் உதவிகள் அதிகமாக காணப்படுகிறது.அந்த உதவிகள் கல்வி ஊக்குவிப்பு-வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நல்ல விடயங்களுக்கு பயன்படுத்தப்பட்டாலும்-மறுபுறம் இளைய சமுதாயத்துடைய ஆடம்பர வாழ்க்கைக்கும் இந்த புலம்பெயர் உறவுகள் ஊடாக கிடைக்கப்பெறும் பணம் பயன்படுகிறது என்பதே உண்மை.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு உறவுகளே இளைஞர்களுடைய மோட்டார் வாகன கனவுகளை நனவாக்குகின்றனர்.
பக்குவமடையாத வயதில் கட்டுப்படுத்த முடியாத அதிக வலு கொண்ட மோட்டார்சைக்கிள்கள் அந்த இளைஞர்களுடைய வாழ்க்கையை பாதியிலேயே முடித்து விடும் என்பதனை அந்த உறவுகள் உணர்வதில்லை.
வீதி விபத்துக்களால் மனித உயிர்கள் காவு கொள்ளப்படும் அதே வேளையில் அரசாங்கமும் பாரிய நஷ்டங்களை சந்தித்து வருகிறது.விபத்துக்களால் அரச சொத்துக்கள் சேதமடைவதுடன்-காயமடைந்தவர்களுக்கான மருத்துவ செலவுகளுக்காக பல பில்லியன் ரூபாவை செலவிட நேரிடுகிறது.
இந் நிலையில் கடந்த நவம்பர் மாதம் வீதி விபத்துக்களால் ஏற்படுகின்ற மரணங்களைக் குறைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் உயர் மட்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு அந்தக் குழு விபத்துக்களை குறைப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கையில் வீதி விபத்துக்களால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள்,
பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள் ஏராளம்.அத்துடன் அவயங்களை இழந்து வாழ்நாள் முழுவதும் இன்னொருவருடைய உதவியுடன் ,மனதில் வலியோடு வாழ்பவர்களும் ஏராளம்.ஒரு நிமிட கவனயீனம் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி நிலைமை,வேலைவாய்ப்பு இன்மை உள்ளிட்ட மன அழுத்தங்களால் ஏற்படக்கூடிய கவனயீனம் விபத்து ஏற்பட காரணமாக உள்ளது.
மேலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான ரயில் கடவைகள் பாதுகாப்பற்ற கடவைகளாகவே உள்ளன.ஒருசில கடவைகளில் மாத்திரமே பாதுகாப்பு தடுப்பு துலா காணப்படுகிறது.ஏனைய கடவைகள் பாதுகாப்பற்ற கடவைகளாக எந்நேரமும் மனித உயிர்களைக் பலியெடுக்க காத்திருக்கின்றன.புகையிரதத்தின் வேகத்தை அதிகரிக்க- புகையிரத பாதையை மேம்படுத்த ஒதுக்கிய நிதியில் ஒரு சிறு பகுதி கூட பாதுகாப்புக் கடவைகளுக்கு ஒதுக்கியதாக தெரியவில்லை.
இவ்வாறான பாதுகாப்பற்ற கடவைகள் அனைத்தையும் பாதுகாப்புக் கடவைகளாக மாற்றி மனித உயிர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உரிய திணைக்களங்களுக்கும்-அரசாங்கத்திற்கும் உண்டு.அதற்குரிய அழுத்தங்களைக் கொடுத்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அந்தந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கடமையாகும்.
விபத்துக்களை தடுக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை துறை சார் அதிகாரிகளும்-அரச உத்தியோகத்தர்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்.குறிப்பாக விபத்துக்களைத் தவிர்ப்பதில் பொலிஸாருடைய பங்கு அதிகமுள்ளது.பொலிஸார் பொறுப்புணர்ந்து அற்ப சலுகைகளை எதிர்பார்க்காது நாட்டிற்காகவும்-மக்களுக்காகவும் செயற்பட வேண்டும்.
வீதி விபத்துக்களால் அதிகம் இளைய சமுதாயமே இழக்கப்படுகிறது. இது நாட்டிற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது.நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புக்களை விட விபத்தால் அங்கத்தவரை இழந்த குடும்பங்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றன.
எனவே நாட்டில் விபத்துக்களை குறைக்க பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதுடன்-சாரதிகள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டால் பல விபத்துக்களை தவிர்க்க முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.