அரசை வீழ்த்துவதற்கான மக்களின் ஒரேதெரிவு ஐக்கிய மக்கள் சக்தியே நாலக கொடஹேவா கூறுகிறார்

 

தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதே எமக்குள்ள ஒரே தெரிவாகும் என்று தெரிவித்துள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான கலாநிதி நாலக கொடஹேவா, சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் தனித்தனியாக சுயாதீனமாகவே தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணையும் தீர்மானத்தை எடுக்கவில்லை என்று அதன் தலைவரான டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ள நிலையில், கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி ஜனநாயகப் பண்புகளுடனான நல்லாட்சியை உருவாக்குவதே எமது இலக்காக உள்ளது. அந்தவகையில் தேசிய பரப்பில் உள்ள அரசியல் அணிகளில் சிறந்த தரப்புடன் கைகோர்க்க வேண்டியது அவசியமாகின்றது.

அவ்வாறு கைகோர்க்காது விட்டால் எம்மால் தற்போதைய ஆட்சியை வீழ்த்த முடியாது. அந்தவகையில், தற்போதைய ஆட்சியை வீழ்த்துவதற்குள்ள ஒரே தெரிவு பிரதான எதிர்க்கட்சியாகும்.

அந்தக் கட்சி தலைமையிலான பரந்துபட்ட கூட்டணியிலேயே நாம் இணைந்துள்ளோம். அவர்களுடன் இணைந்து மக்கள் எதிர்பார்க்கின்ற நல்லாட்சியை உருவாக்குவதே எமது இலக்காக உள்ளது.

அதுமட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக இருந்தால் அது நிச்சயமாக அனைத்து சமூகங்களினதும் பங்களிப்புடன் தான் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.

அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான பரந்துபட்ட அணியில் அனைத்து சமூகங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். அதனடிப்படையில் தான் நாம் அக்கட்சியுடனான கூட்டில் இணைந்து கொண்டோம்.

சுதந்திர மக்கள் காங்கிரஸில் மொத்தமாக 13 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் அறுவர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்துள்ளனர். இன்னும் இருவர் சொற்ப காலத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர்.

அதேநேரம், எமது தரப்பிற்கு தலைமைவகித்து வரும் டலஸ் அழகப்பெரும இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. எமது தரப்பில் யாருடன் இணைந்து அடுத்தகட்ட அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது என்று கூட்டாக தீர்மானம் எடுக்கப்படவில்லை.

மாறாக, தனித்தனியாக உறுப்பினர்கள் சுதந்திரமாகவே தீர்மானித்தனர். ஆகவே, ஜனநாயக இலட்சணங்கள் கொண்டதாகவே நாம் செயற்படுகின்றோம். தீர்மானங்களில் எந்தவிதமான ஆதிக்கங்களையும் யாரும் செலுத்தவில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.