பொருளாதாரப் படுகொலையாளிகள் சுதந்திரமாக வாழ பொறுப்புக்கூற தேவையில்லாத மக்கள்மீது தண்டனை! கபீர் ஹாசீம் காட்டம்

 

பொருளாதாரப் படுகொலையாளிகள் சுதந்திரமாகவும் உல்லாசமாகவும் வாழும் நிலையில் பொருளாதாரப் பாதிப்புக்கு பொறுப்புக் கூற தேவையில்லாத நாட்டு மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய செயற்படுவதாக இருந்தால் அரசாங்கம் என்பதொன்று தேவையில்லை.

நிதியமைச்சை நாணய நிதியத்துக்கு பொறுப்பாக்கலாம். நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துவதில் மஹிந்த ராஜபக்ஷ சிறந்த நடிகர். வற் வரி விதிப்பின் பெறுபேறு மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் மந்த போசணை பாதிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

பொருளாதார முகாமைத்துவத்தில் அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

பொருளாதாரப் பாதிப்பின் சுமையை ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது பொறுப்பாக்கிய அரசாங்கம் தற்போது வற் வரியை அதிகரித்து ஒட்டுமொத்த மக்களையும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது.

பொருளாதாரப் பாதிப்பின் விளைவால் நிர்மாண கட்டுமானத்துறை, சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறை,தகவல் தொழில்நுட்பம் உட்பட சேவைத்துறைகள் என்பன சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் வசதி படைத்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்ற நிலையில் வசதியில்லாதோர் பட்டினியால் போராட்டத்தில் ஈடுபட நேர்ந்தது. தமது பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக பெரும்பாலான பெற்றோர் பட்டினியில் வாடுகிறார்கள்.

இளைஞர் யுவதிகள் தொழிலின்மையால் விரக்தியில் உள்ளார்கள். மறுபுறம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் ‘பராட்டே’ சட்டத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வற் வரி அதிகரிப்பைத் தொடர்ந்து அத்தியாவசிய உணவு பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வடைந்துள்ளது.

இதனால் கல்வித்துறை பாதிக்கப்படுவதுடன்,மந்த போசணை வீதமும் உயர்வடையும் இதனைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

1989 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டையில் பாரிய போராட்டம் இடம்பெற்றது.ஜனநாயகத்துடன் வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.பிரான்ஸ் புரட்சியும் வாழ்க்கை செலவு உயர்வு,பணவீக்கம் உயர்வு என்பனவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோற்றம் பெற்றது.ஆகவே நாட்டு மக்கள் வெகுவிரைவில் வாழ்க்கை செலவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்குவார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார ரீதியில் எடுத்த தவறான,மூர்க்கத்தனமான தீர்மானங்களால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

பொருளாதாரப் படுகொலையாளிகள் சுதந்திரமாகவும்,உல்லாசமாகவும் வாழுகின்ற நிலையில் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற தேவையில்லாத மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரிகளை அமுல்படுத்துமாறு குறிப்பிடவில்லை.வரி திருத்தம் என்று குறிப்பிட்டுக் கொண்டு நேர் மற்றும் நேரில் வரி தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.

நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு அமைய செயற்படுவதாக இருந்தால் அரசாங்கம் என்பதொன்று தேவையில்லை.

நிதியமைச்சை நாணய நிதியத்துக்கு பொறுப்பாக்கலாம்.சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.

மொத்த தேசிய உற்பத்தியை 12 சதவீதமாக அதிகரித்துக் கொண்டு அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுமாறு நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரிகளை அமுல்படுத்தாமல் செல்வந்த தரப்பினரிடமிருந்து வரிகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,செல்வந்த வரி,கொடை வரி என்பனவற்றை அறிமுகப்படுத்துமாறும் நாணய நிதியம் குறிப்பிட்டது.

ஆனால் அரசாங்கம் அதனை செயற்படுத்தாமல் வற் வரியை அதிகரித்து ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

2021 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடியின் போது 1.9 ரில்லியன் பெறுமதியான திறைசேரி பிணைமுறிகளை அரசாங்கம் விநியோகித்தது.இதனை நிதி நிறுவனங்கள் பல பெற்றுக்கொண்டன.இதற்கு அரசாங்கம் 27 சதவீத வரி செலுத்தியது.

கடன் மறுசீரமைப்பின் போது இந்த நிறுவனங்களிடமிருந்து வரி அறவிட எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 500 குடும்பங்கள் மாத்திரமே வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களை திசைத்திருப்பும் சிறந்த நடிகர் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

நாட்டு மக்களை அதளபாதாளத்துக்கு தள்ளும் வற் வரியை அதிகரிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்து விட்டு இரு தினங்களுக்கு பின்னர் வரி அதிகரிப்புக்கு நாங்கள் எதிர்ப்பு என்று அறிக்கை வெளியிடுகிறார்.

மஹிந்த ராஜபக்ஷ உட்பட பொதுஜன பெரமுனவினர் எந்தத் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் எந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வரி விலக்கு மற்றும் விசேட சலுகை வழங்க கூடாது என்று சர்வதேச நாணய நிதியம் தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில் அதனை கவனத்திற் கொள்ளாமல் சீன நிறுவனத்துக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள முதலீட்டுக்காக சீன நிறுவனத்துக்கு 15 வருட காலத்துக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதுடன்,அதன் சேவையாளர்களுக்கும் வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது.இதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே இந்த வரி விலக்குக்கு மஹிந்த ராஜபக்ஷ உட்பட பொதுஜன பெரமுனவினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.