ஒரு லட்சம் கோடி ரூபா நிலுவை வரியை அறவிட நடவடிக்கை எடுக்கவில்லையாம்! சம்பிக்க குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் முக்கிய நிபந்தனைகளைப் புறக்கணித்துச் செயற்படுகிறது.

ஒரு லட்சம் கோடி ரூபா  நிலுவை வரியை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க  ரணவக்க தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நாடும், நாட்டு மக்களும் இன்று பொருளாதார ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு ராஜபக்ஷர்களே காரணர். இதனை அரசியலுக்காகக் குறிப்பிடவில்லை. ராஜபக்ஷர்கள் பொருளாதாரப் படுகொலையாளிகள் என்பதை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக ராஜபக்ஷர்கள் குறிப்பிடுகின்றமை நகைப்புக்குரியது. நாட்டையும், நாட்டு மக்களையும் அதளபாதாளத்துக்குள் தள்ளியதை ராஜபக்ஷர்கள் மறந்து விட்டார்கள்.

2019 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் 69 லட்சம் மக்கள் செய்த தவறால் ஒட்டுமொத்த மக்களும் இன்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். முறையற்ற நிர்வாகத்தால் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ராஜபக்ஷர்கள் அரசியலில் இருந்து முழுமையாகப் புறக்கணிக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளை செயற்படுத்துவதாகக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வற் வரி ஊடாக அரச வருமானத்தை 60 கோடி ரூபா வரை பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வர்த்தகர்கள் ,அரசியல் செல்வாக்கு உள்ளவர்களிடமிருந்து மதுவரி திணைக்களம்,தேசிய இறைவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபா வரியை அறவிடவில்லை. இந்த நிலுவை வரியை அறவிட அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தெரிவுசெய்யப்பட்ட வகையில் செயற்படுத்தப்படுகிறது. நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் விடயங்கள் மாத்திரம் செயற்படுத்த அவதானம் செலுத்தப்படுகிறது.வங்குரோத்து நிலையிலும் செல்வந்தர்களுக்கு விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.