போராட்டங்களில் கலந்துகொண்ட 23,000 பேரையும் பதவிநீக்கலாமா? ஒன்றிணைந்த மின்சார சேவை சங்கம் கேள்வி

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 23 ஆயிரம் ஊழியர்கள் கலந்துகொண்டார்கள். சேவையில் இருந்து இடைநிறுத்துவதாக இருந்தால் 23 ஆயிரம் பேரையும் இடைநிறுத்த முடியுமாவென ஒன்றிணைந்த மின்சார சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார சபையின் ஊழியர்கள் கடந்த 03,04 மற்றும் 05 ஆகிய தினங்களில் பகல் உணவு வேளையின் போது மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்தின் முன்பாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மின்சார சபையின் ஊழியர்களின் சகல விடுமுறைகளையும் இரத்துச் செய்யும் வகையில் மின்சார சபையின் மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் கடந்த  2024.01.02 ஆம் திகதி விசேட சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இந்த சுற்றறிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சேவையாளர்களுக்கு எதிராக மின்சார சபை உள்ளக மட்டத்தில் விசாரணைகளை மேற்கொண்டு மின்சார சபையின் 66 ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபை தொழிற்சங்கத்தினர் திங்கட்கிழமை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மின்சார சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டவை வருமாறு –

மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் மின்சார சபையின் சேவையாளர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

மின்சார சபை சேவையாளர்களின் வருமானம் மற்றும் அவர்களுக்கான இதர கொடுப்பனவு பற்றி மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அரசியல்வாதிகளின் ஊழல் மோசடியால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது. இதனை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது. அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு நாட்டு மக்கள் வெகுவிரைவில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

போராட்டத்தில் 23 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள் அனைவரையும் பதவி நீக்க முடியுமா, மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்வோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.