நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் ஆராயவில்லை! கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண கருத்து

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் முதலில் வர்த்தமானியில் வெளியானவேளை சட்டமா அதிபர் திணைக்களம் அதனை ஆராயவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி  ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதலில் இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது.

நாங்கள் இதற்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்றோம். சட்டமா அதிபர் திணைக்களம் அந்த சட்டமூலத்தில்  30 திருத்தங்களை முன்வைப்பதாக தெரிவித்தது என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருசட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டால் சட்டமா அதிபர் திணைக்களம் அதனை ஆராய்ந்து அது அரசமைப்பிற்கு உட்பட்டதா என்பதைத் தெரிவிக்கவேண்டும். ஆனால் அவர்கள் அதனை தெரிவிக்காததால் அவர்கள் இந்த சட்டமூலத்தை ஆராயவில்லை போலத் தோன்றுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை ஊடக அமைச்சு தயாரித்தது. நீதியமைச்சு சமர்ப்பித்தது என அரசாங்க வட்டாரங்கள் எனக்குத் தெரிவித்தன. கடந்த காலங்களில் பல தடவை அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட சட்டமூலங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நீதிமன்றில் இணங்கியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் இரண்டு நாள்களிற்கு மாத்திரமே நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து விவாதித்தது. அரசாங்கம் அதனை அவசரஅவசரமாக நிறைவேற்ற விரும்பியது போலத் தென்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ள ஜயம்பதி விக்கிரமரட்ண இந்த சட்டம் மக்களின் கருத்து சுதந்திரத்தின் மீது பெரும் தாக்கத்தை செலுத்தும். இதனைப் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் விருப்பம் தெரிவிப்பது கூட கருத்துதெரிவிப்பது தான் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ள விடயத்தினை ஆராயும்போது அரசாங்கம் விரும்பாத ஒரு பதிவை நீங்கள் விரும்பினால் அதற்கு நீங்கள் பழிவாங்கப்படலாம் எனவும் ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

பலகருத்துப்பரிமாற்றங்கள் இணையத்திலேயே இடம்பெறுகின்றன. தங்கள் எண்ணங்களை சொல்வதற்கு பகிர்ந்துகொள்வதற்கு மக்கள் சமூக ஊடகங்களையே பயன்படுத்துகின்றனர் எனத் தெரிவித்துள்ள அவர், இரண்டு தேர்தல்கள் இடம்பெறவுள்ளன அதிகளவான பிரச்சாரங்கள் விவாதங்கள் இணையத்திலேயே இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் தேர்தல்களை மையமாக கொண்டவை என நாங்கள் கருதுகின்றோம். பல வருடங்களில் இவ்வாறான சட்டமூலங்களை  நிறைவேற்ற பல வருடங்களாகும் அரசாங்கம் தனது பொருளாதாரக் கொள்கைகளிற்கான மக்களின் எதிர்ப்பை ஒடுக்க முயல்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.