அம்பாறை மாவட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட பிரதேச செயலகங்களுக்கு உயரிய கௌரவம்
நூருல் ஹூதா உமர்
ஸ்ரீலங்கா இஸ்லாமிக் ரிலீப் நிறுவனம், அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் இலங்கையில் நிலையான வாழ்வாதாரத்தின் மூலம் விதவைகள் மற்றும் பெண்களை வழிநடத்தும் குடும்பத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மூன்று வருடங்களாக வெற்றிகரமான முறையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கையில் நிலையான வாழ்வாதாரத்தின் மூலம் விதவைகள் மற்றும் பெண்களை வழிநடத்தும் குடும்பத்தை மேம்படுத்துவதனூடாக பொருளாதார ரீதியாக நலிவுற்ற பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை வலுப்படுத்துவதே இச்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தினூடாக வாழ்வாதார உதவிகள், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது அவரச உலர் உணவு பொதிகள், அனர்த்த நிவாரனம், மாணவர்களுக்கான கற்றல், சுயதொழில் பயிற்சி மற்றும் வழிகாட்டல்கள் என பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில், இவ்வேலைத்திட்டத்தின் அரச பங்குதாரர்களுக்கான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளாய்வு செயலமர்வும் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்திய பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பும் 2024 ஜனவரி 23 ஆம் திகதி அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரமவின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இத்திட்டம் அமுல்படுத்தப்பட்ட இறக்காமம், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நாவிதன்வெளி, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி மற்றும் பதியத்தலாவ ஆகிய 07 பிரதேச செயலக பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களே கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், இலங்கை இஸ்லாமிய நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிதி ஒருங்கிணைப்பாளர் அஹமட் இர்ஷாத், சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் ஏ.சுபுஹான், சிரேஷ்ட நிதி உத்தியோகத்தர் ஏ.பி.அர்சாத், திட்ட இணைப்பாளர்களான சி. சுகிர்தனி, சசிகுமார் கனேஷமூர்த்தி, ரமேஷ், ஹூதா ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் வாழ்வாதாரத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க கடுமையாக உழைத்த இஸ்லாமியக் ரிலீப் நிறுவன குழுவினரும் மாவட்ட செயலாளரால் கௌரவிக்கப்பட்டனர்
கருத்துக்களேதுமில்லை