வவுனியாவில் ரயில் பாதுகாப்பு கடவையில் போக்குவரத்து நடைமுறைகள் அசமந்தம்! அதிகரிக்கும் விபத்துக்கள்

வவுனியா ரயில் நிலைய வீதியில் காணப்படும் ரயில் பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றாது பயணம் செய்வதால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமுள்ளன.

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகே காணப்படும் ரயில் பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல், ரயில் பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தை செலுத்துதல், ரயில் கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக ரயில் நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் மூடப்பட்டிருந்த பாதுகாப்பான புகையிரதக் கடவையை கடந்து சென்ற ஒருவர் கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான விபத்துக்களை தடுக்க குறித்த வீதி நடைமுரைறகளை பொது மக்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயமானதாகும். அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.