பண்டாரவளை குப்பை மலையில் பாரிய தீ!

பண்டாரவளை, எல்ல பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள குப்பை மலையில் தீ ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ள, குறித்த குப்பை மேட்டில் நேற்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணியளவில் தீடீரென தீ ஏற்பட்டு பெரும் தீப்பரவலாக மாறியுள்ளது.

இது தொடர்பாக எல்ல பிரதேச சபைத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

சுமார் மூன்று மணிநேரம் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் தீ 90 வீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், இன்று மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டு வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் அப்பகுதி புகைமண்டலமாகக் காட்சியளிக்கின்றது.

எல்ல பிரதேச சபையில் தீயணைப்பு வாகனம் இல்லாமையால், இன்று பண்டாரவளை மற்றும் பதுளையில் இருந்து வாகனம் வரவழைக்கப்பட்டது.

பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பற்ற நிலையிலேயே இக்குப்பை மேடு காணப்பட்டுள்ளதுடன் உக்காத பொருட்களும் அதிகளவு இருந்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.