அரியாலை ஆலய வழிபாடு விவகாரம் தொடர்பில் முதல்வர் ஆனல்ட் கலந்து கொண்டோரிடம் விசேட வேண்டுகோள்

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனிய தேவாலயத்தில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்து கடந்த 2020.03.15ஆம் திகதி மத போதனையில் ஈடுபட்ட தலமைப் போதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தலமைப் பரிசோதகருடன் நெருக்கமாக இருந்த நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

உலகில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கம் தொடர்பிலும், எவ்வாறு பல நாடுகளிலும் உயிர்களை பலி எடுத்துக்கொண்டிருக்கின்றது என்பதையும் எவரும் அறியாமல் இல்லை. இது குறித்து உரையாடல்களை குறைத்து குறித்த தினத்தில் நடைபெற்ற சமய வழிபாட்டில் கலந்து கொண்ட யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட மற்றும் மாநகர எல்லைக்கு வெளியிலிருந்து பங்குபற்றிய அனைவரும் எவ்வித தயக்கமுமின்றி சுகாதார அமைச்சினாலும், சுகாதார துறை நிபுணர்களினாலும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற வைத்திய முறைமைகளுக்கு அமைவாக தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள முன்வருமாறு பொறுப்புணர்வுடன் பகிரங்கமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

எம் மக்களை நாமே பாதுகாக்க வேண்டும். இவ் வைரஸ் தாக்கத்திலிந்து தவிர்ந்து கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய அனைத்து சுகாதார முறைமைகளையும் நாம் ஒவ்வொருவரும் கடைபிடிப்பதுடன், நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற ஊரடங்கு சட்ட முறைமைக்கும் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுமாறும் வலியுறுத்துகின்றேன்.

மேலும் இவ் வைரஸ் வல்லரசு நாடுகளையே அச்சுறுத்தி ஆட்டங்காண வைத்துள்ளது. இந் நிலையில் எமது மக்கள் மிகுந்த அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். மக்களை மேலும் அச்சமடையச் செய்யாது 15.03.2020 ஆம் திகதி குறித்த தேவாலயத்தில் நடைபெற்ற சமய வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் எவ்வித தயக்கமுமின்றி நம் மக்களை பாதுகாக்கும் வகையில் மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.