ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நேரம் நகரங்களில் திரண்ட மக்கள்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதிகளில் மக்கள் அத்தியவசித் தேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.  இந்நிலையில் குறித்த பகுதிகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினராலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில், மட்டக்களப்பில், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பெருமளவில் பொருள் கொள்வனவில் ஈடுபட்டதைக் காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மக்கள் ஒன்றுகூடுவதனைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் இடைவெளியிட்டு நிற்க வேண்டும் என்பதுடன், மக்கள் ஒன்றுகூடும் பொதுச்சந்தை போன்ற பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் மக்களை அறிவுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

அத்துடன், இயந்திரங்களில் பணம்பெறும் இடங்கள், பல்பொருள் அங்காடிகள், மருந்துப்பொருட்கள் விற்பனை நிலையங்களில் அதிகளவான மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபடுவதைக் காணமுடிந்தது.

 

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெருமளவு ஆர்வம் காட்டி வந்தனர்.

இதனடிப்படையில் கல்முனை, சாய்ந்தமருது, மத்திய முகாம், கல்முனை மருதமுனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் அதிகளவில் கூடியிருந்தனர்.

இந்நிலையில், பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டதோடு, மக்களுக்கிடையில் சுகாதார நடவடிக்கைகள் பினபற்றப்படுகின்றமை குறித்து அவதானிக்கப்பட்டதோடு கொரோனா வைரஸ் குறித்த விளிப்புணர்வு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

இதனிடையே கல்முனைப் பகுதியில் ஊரடங்கு நிறைவடையும் தருவாயில் அதிக விலைக்கு தரமற்ற முககவசம் விற்பனை செய்த செயற்பாடு தடுக்கப்பட்டது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நேரம் நிறைவுபெறும் போது, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் வந்த ஒருவர் தரமற்ற முகக் கவசங்களை 300 ரூபாய் வரை விற்பனை செய்ய முயன்றார். இந்நிலையில் அவ்வீதியால் பயணம் செய்த ஊடகவியலாளர் குழு குறித்த விற்பனையைத் தடுத்து நிறுத்தியது.

மேலும், மலையகத்திலும் அங்குள்ள பிரதான நகரங்களுக்கு பெருமளவில் மக்கள் சென்று அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.

சதொச விற்பனை நிலையங்கள், வங்கிகள், சுப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஏனைய முக்கியமான சில வர்த்தக நிலையங்களில் மக்கள் அணிவகுத்து நின்றதை காணக்கூடியதாக இருந்தது. எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகனங்கள் வரிசையாக நின்றன.

கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள நகரங்களிலும் இந்நிலைமையே காணப்பட்டது.

அதேவேளை, உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டிய மக்கள், இரு வாரத்துக்குரிய பொருட்களை ஒரே தடவையில் கொள்வனவு செய்தனர் என வர்த்தகப் பிரமுகர்கள் தெரிவித்தனர். நகரத்தின் சில இடங்களில் கைகளைக் கழுவுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.