தனியா வீட்ல இருக்கறது ரொம்ப மனஅழுத்தமா இருக்கா? இத சாப்பிடுங்க… சரியாயிடும்…

கொரோனா பாதிப்பின் உச்சம் என்பது, உடல் ரீதியான பாதிப்புகளை விட அதிக அளவில் மன ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் கோபம், எதற்கெடுத்தாலும் எரிச்சலடைவது, மன அழுத்தம் என உணர்வு ரீதியாக நிறைய பிரச்சினைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதற்காக கோபப்பட வேண்டுமோ அதற்காகத்தான் கோபப்பட வேண்டும். சிலர் எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்கென்று கோபப்படுவார்கள். அதை எப்படி சரிசெய்வது என்பதே அவர்களுக்குப் புரியாது. ஆனால் உங்களுக்கு இப்படி மூக்குக்கு மேல் கோபம் வருவதற்கும் நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இதனால் நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கூட, மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்கு மருந்து மாத்திரையெல்லாம் தேடி அலைய முடியாது. நாம் சாப்பிடும் உணவின் மூலமே அதை சரி செய்து கொள்ள முடியும். அப்படி என்ன மாதிரியான டயட்டினால் இந்த மன அழுத்தத்தைச் சரிசெய்ய முடியும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

​என்னென்ன பழங்கள்

samayam tamil

பொதுவாக உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்காக வைட்டமின் சி நிறைந்த பழங்களைச் சாப்பிடச் சொல்லி மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, கொய்யா மற்றும் அன்னாசி, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்திருப்பது நமக்கு நன்றாகவே தெரியும். அதனால் தொடர்ந்து நம்முடைய உணவில், வைட்டமின் சி அதிகமுள்ள இந்த பழங்களை எடுத்துக் கொள்வதால், நம்முடைய மன அழுத்தம் வெகுவாகக் குறைகிறது என்றே சொல்லலாம். இதிலுள்ள சத்துகளும் உடல் சோர்வை நீக்கி, உடலையும் மனதையும் புத்துணர்வாக வைத்துக் கொள்ளப் பயன்படுகிறது.

​பச்சை பட்டாணி

samayam tamil

பீன்ஸ் மற்றும் பட்டாணியில் அதிகளவில் ட்ரை-ப்டோபேன் என்னும் ஊட்டச்சத்து உள்ளது. அதனால் அதிக அளவில் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வாக இருக்கும் பொழுது பட்டாணி, பீன்ஸ் போன்ற உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இவை மனஅழுத்தத்தைப் போக்க பயன்படுகின்றன. அதோடு இவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் உடலில் செரோட்டனின் எனும் பொருள் உருவாக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த செரோட்டனின் எனும் பொருள் நம்முடைய உடலில் மனமகிழ்ச்சி, நிம்மதி, புத்துணர்ச்சி போன்ற உணர்வு ரீதியான விஷயங்களைத் தூண்டி, மனதுக்கு நிம்மதியை ஏற்படுத்துகின்றன

​வாழைப்பழம்

எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் மிக எளிமையாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் தான். முக்கனிகளில் ஒன்றாக விளங்கும் இந்த பழம் எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைப்பதால் இதன் அருமை நமக்கு அவ்வளவாக விளங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வாழைப்பழத்திலும் ட்ரை-ப்டோபேன் எனும் பொருள் அதிக அளவில் உள்ளது. மற்றும் வாழைப்பழத்தில் செரோட்டனின் உருவாக தேவைப்படும் மற்றொரு வேதிப்பொருள்களும் அதிகமாகவே உள்ளது. மேலும் இதில் விட்டமின் பி மற்றும் பொட்டாஷியம் போன்ற சத்துகள் அதிகமுள்ளதால் மனதில் ஏற்படும் பதட்டத்தைக் குறைத்து மன அமைதியைக் கொடுக்கிறது.

​சிவப்பு அரிசி

samayam tamil

பொதுவாக அரிசி என்றாலே கார்போஹைட்ரேட் நிறைந்தது. உடலுக்குக் கேடு, கொழுப்பை அதிகரிக்கும். நீரிழிவுக்கு வழிவகுக்கும் என பல தவறான எண்ணங்கள் இருக்கின்றன. அதேபோல் அரிசியில் பல வகையுண்டு. வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவப்பு கைக்குத்தல் அரிசியோ பிரௌன் ரைஸோ நீங்கள் பயன்படுத்தலாம். அவற்றில் நார்ச்சத்துக்கள் மிக மிக அதிகம். ஓட்ஸ், பிரவுன் அரிசி போன்ற உணவு வகைகளில் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் பி காம்ப்ளக்ஸ், அமினோ அமிலங்கள் மற்றும் மன அழுத்தத்தைப் போக்க உதவும் மற்ற சத்துகள் அதிகமுள்ளதால், இதுபோன்ற வீட்டில் இருக்கும் சமயங்களில், மனம் அமைதியற்று இருக்கும் சமயங்களில் சாப்பிட்டு வாருங்கள். உங்களுக்கு நிலையான மற்றும் அமைதியான மனநிலையை இது தருகிறது.

​பால்

நம்மை அமைதிப்படுத்தும் மற்றொரு எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு வகை பால். ஆம்! பாலில் லாக்டியம் என்றொரு வேதிப்பொருள் உள்ளது. இது கோர்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோனை குறைக்க பயன்படுகிறது. பொதுவாக பால் அதிகம் குடித்தால் எனர்ஜி கிடைக்கும் என்றும், மந்த நிலையை உண்டாக்கும் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் மன இறுக்கத்தை அதிகரிக்கச் செய்யும் வேதிப்பொருள் உடலில் சுரப்பதைக் கட்டுக்குள் வைக்கிறது. அதனால் மன இறுக்கம் தவிர்க்கப்படுகிறது. அதனால் தான் பால் அதிகம் சாப்பிடுபவர்கள் சாதாரணமானவர்கள் என்றும் நம்மிடைய சில கருத்துக்கள் இருக்கின்றன.

​பாதாம்

மேற்சொன்ன எல்லா உணவுப் பொருள்களைக் காட்டிலும் பாதாம் உங்களுடைய மன அழுத்தத்துக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். நீங்கள் மிகுந்த இறுக்கமாக மன நிலையிலும், மன அழுத்தத்திலும் இருக்கிற சமயங்களில் அந்த கோபத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் குழம்பினால், அமைதியாக ஒரு கைப்பிடியளவு பாதாமை எடுத்து தன் சுவையை மனதுக்குள் எண்ணி ருசித்தவாறு சாப்பிட ஆரம்பியுங்கள். உங்களுடைய மன இறுக்கம் உங்கள் முன்னே தளர்ந்து அமைதியாவதை உணர்வீர்கள். அப்படி இருக்கிற வேளையில், பாதாம் மூளைக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு உணவு. இதில் மனதை அமைதிப்படுத்த மற்றும் ஒருநிலைப்படுத்த உதவும் ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிகமுள்ளது.

மன இறுக்கத்தைக் குறைக்க இத்தனை விஷயங்கள் நம் கண் முன்னே இருக்கும்போது, எதற்கான வீணாக அதை அதிகப்படுத்தும் விஷயங்களில் ஈடுபட வேண்டும். நிறைவாக ஆரோக்கியமாக சாப்பிடுங்கள். உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.