உலகப் பிறழ்நிலையை சாதகமாக்கி அசட்டைத் துணிவுடன் தமிழர்கள் மீது தொடரும் தாக்குதல்- துரைராசசிங்கம்

சர்வதேசப் பொறிமுறையை இலங்கைக்கு எதிராக தாமதிக்காது செயற்படுத்த வேண்டும் என்ற செய்தியை மிருசுவில் படுகொலை குற்றவாளியின் விடுதலை வெளிப்படுத்துவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனாவினால் உலகமே இயல்பான இயங்குநிலையில் இல்லாததைச் சாதமாக்கிக் கொண்டு அசட்டைத் துணிவுடன் தான் நினைத்ததையெல்லாம் ஜனாதிபதி செய்ய முடியும் என்று காட்டுகின்ற ஒரு அபாய விளக்கு இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிருசுவில் படுகொலை தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டவரை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளமை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “சிறுவர், சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் மிருசுவிலில் வன்கொலை செய்யப்பட்டார்கள். உடலங்கள் மலக்குழியில் இட்டு மறைக்கப்பட்டன.

இது தொடர்பாக லெப்டினன் கேணல் சுனில் ரட்நாயக்க உட்பட ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அதில் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதோடு சுனில் ரட்நாயக்கவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐந்து நீதியரசர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலே மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த மேற்படி குற்றவாளி இலங்கை ஜனாதிபதியால் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நமது நாடு உட்பட மொத்த உலகும் கொரோனா வைரஸ் பீதியிலும், துக்கத்திலும் ஆழ்ந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே இச்செய்தி தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியாகும்.

சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை நிறுவனங்கள் இந்த விடுதலை குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ வீரராக இருந்து இராணுவ சிற்றதிகாரியாகப் பதவியுயர்ந்து பின்னர் பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்தவர்.

இராணுவத்தினர் ஒவ்வொருவரும் இறுக்கமான ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், கடமையின் போதும் அல்லது முகாமில் இருக்கும் போதும் வரம்பு மீறிச் செயற்படுமிடத்து இராணுவச் சட்டத்தின் மூலமாகவே அவ்வாறு செயற்பட்டவருக்குத் தண்டனை வழங்குகின்ற நடைமுறையும் உண்டு.

அந்த நடைமுறை சுனில் ரட்நாயக்க உட்பட ஏனைய ஐந்து பேர் தொடர்பாகவும் கையாளப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அது கையாளப்படாதமையினால், அதையும் மீறி உயர்நீதிமன்றம் வரை சென்று கையாளப்பட்ட விடயமாகும்.

இவ்விடயங்கள் போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டுப் பொறிமுறைகள் பொருத்தமானதல்ல என்பதை உறுதிப்படுத்துவதாய் அமைகின்றன.

ஒட்டுமொத்தமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தனது சர்வதேசம் தழுவிய செயற்பாட்டுப் பொறிமுறையை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தாமதியாது செயற்படுத்த வேண்டும் என்கின்ற செய்தியையே இந்த கொலையாளி விடுதலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியான, வெளிப்படையான தாக்குதல்கள் இடம்பெறும். உலகமெல்லாம் மிகக் கொடுமையான ஒரு நோய் தொடர்பாக கவனம் செலுத்தியும், இயல்பான இயங்குநிலை இல்லாத நிலையிலும் இருக்கின்ற இந்தச் சூழ்நிலையிலே ஜனாதிபதியின் செயற்பாடானது மிகவும் கொடுமையானதும், பயங்கரமானதுமாகும்.

இன்னொருவகையில் உலகப் பிறழ்நிலையை சாதமாக்கிக் கொண்டு அசட்டைத் துணிவுடன் தான் நினைத்ததையெல்லாம் ஜனாதிபதி செய்ய முடியும் என்று காட்டுகின்ற ஒரு அபாய விளக்காக இச் செயற்பாடு அமைகின்றது. இச் சூழ்நிலையிலே மனித உரிமை ஆணையமும் ஐக்கியநாடுகள் சபையும் இவ்விடயம் தொடர்பில் விரைந்து செயற்படுவது இன்றியமையாததொன்றாகும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.