யாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம்! உடன் நடவடிக்கை – அங்கஜன்

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்!  உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல்

யாழ் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ள காரணத்தினால் யாழ் மாவட்ட மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாரியளவு பாதித்துள்ளது. இதனால் மக்கள் அருகில் உள்ள கடைகளில் அல்லது நடமாடும் சேவை மூலம் தமது அத்தியாவசிய உணவு மற்றும் வேறு இதர பொருட்களை  கொள்வனவு செய்யும் போது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் கட்டுப்பாட்டு விலைகளிலும் பார்க்க மிக கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது என பலரும் முறைப்பாடு செய்துள்ளனர். இதனால் பெரிதும் பாதிப்படைவது நலிவுற்ற வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களேயாகும்.

ஆனால் இவ் அசாதாரண சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி யாழ் மாவட்டத்தில் உள்ள சில மொத்த மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள், பலசரக்கு கடைகள், சதொசா கிளைகள், நடமாடும் வியாபார விநியோக சேவையினர் மற்றும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் தற்போது ஒரு வியாபார உத்தியாக அத்தியாவசிய உணவு பொருட்களை அளவுக்கு அதிகமாக தமது களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்து சந்தையில் செயற்கை தட்டுப்பாட்டின் மூலம் மக்கள் மத்தியில் பயபீதியை ஏற்படுத்தி இரட்டிப்பு விலைகளில் விற்பனை செய்ய முயற்சிப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அங்கஜன் இராமநாதன் இதனை கருத்தில் கொண்டு அதே சந்தர்பத்தில் அரசாங்கத்தின் நிவாரண திட்டத்தின் மூலம் முதியோருக்கான கொடுப்பனவு, மாற்றுத் திறனாளிகளுக்கான கொடுப்பனவு, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு, சமூர்த்தி பயனாளிகள் மற்றும் சமுர்த்தி தகைமை உள்ளோருக்கான கொடுப்பனவு என தலா 5000 ரூபாய்கள் விசேட உதவித் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இவ் அத்தியாவசிய உணவு பொருட்கள் நியாயமான விலையில் விற்றால் மாத்திரமே அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு மூலம் இவர்கள் பயனடைவர் .

ஆனால் அத்தியாவசிய உணவு மற்றும் இதர பொருட்களின் விலைகள் அபரிமிதமாக அதிகரித்து விற்றகப்படும் பட்சத்தில் இக் கொடுப்பனவு கிடைக்கப்பெறுபவர்களுக்கு அந்த கொடுப்பனவு அவர்களது அத்தியாவசிய உணவு தேவைக்கு போதுமானதாக இருக்காது என்பதை சுட்டிகாட்டியுள்ளார்.

இவ்வாறு அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கி வைத்து கட்டுபாட்டு விலையை மீறி விற்பனை செய்வோரை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை அதிகாரிகள் உடனடியாக அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்ய வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.