கட்டம் கட்டமாக பொதுத் தேர்தல்? – கோட்டா அரசு தீவிர ஆலோசனை ஏப்ரல் 26இல் வர்த்தமானி வெளிவரும்

நாடாளுமன்றத் தேர்தலை எப்பாடுபட்டாவது நடத்தி முடிப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீவிரமாக உள்ளார். தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவது தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படும் என்று கொழும்பைத் தளமாகக் கொண்ட அரசியல் உயர்மட்டங்கள் தெரிவித்தன.

மார்ச் 2ஆம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வர்த்தமானி வெளியிட்டிருந்தார். அதற்கு அமைவாக ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என்றும், மே மாதம் 14ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

அரசமைப்புக்கு அமைவாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும். ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டுமாக இருந்தால், மே மாத இறுதியிலாவது தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனால் அரசமைப்பு நெருக்கடி ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 113ஆவது உறுப்புரையின்படி ஜனாதிபதி அறிவித்த தினத்தில் தேர்தல் ஒரு மாவட்டத்தில் நடத்த முடியாவிட்டால் பிறிதொரு தினத்தில் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட முடியும். அதற்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்தாமல், வெவ்வேறு நாட்களில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

22 மாவட்டங்களிலும் எந்ததெந்தத் திகதிகளில் தேர்தல் நடைபெறும் என்பதைக் குறிப்பிட்டு, ஏப்பரல் 26ஆம் திகதி வர்த்தமானியை கோட்டாபய வெளியிடவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.