தமிழ், சிங்கள புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை? – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கொரோனா வைரஸிற்கு எதிராக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றபோதும் தமிழ் சிங்கள புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை தொடர்பான நிலையை சரியாக அறிவிக்க முடியாமல் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நாட்டில் அசாதாரண நிலை எந்தளவிற்கு கூடும் என கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது என்றும் கூறினார்.

இதேவேளை நாளாந்தம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் அடுத்துவரும் ஒருவார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டிய சுகாதார சேவைகள் பணிப்பாளர், புத்தாண்டு காலப்பகுதிவரை கடுமையான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எனவே கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி மக்களை கட்டுப்படுத்தி தொற்று நீக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே நிலை தொடர்பாக அறிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அவர், வீடுகளில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று தொடர்பான அறிகுறி இருந்தால் 1390 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.