அரச நிவாரணங்களை முழுதாக நம்பமுடியாது: உள்ளுர் உற்பத்திகளே தமிழ் மக்களைக் காப்பாற்றும்- சிவமோகன்

அரசாங்கத்தின் நிவாரணங்களை முழுமையாக நம்பமுடியாது எனவும் உள்ளுர் உற்பத்திகளே மக்களைக் காப்பாற்றும் என்றும் வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “கொரேனா வைரஸின் தாக்கம் அடிமட்ட விவசாயிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை பாதிப்படையச் செய்துள்ளது.

இந்த அரசாங்கம் தங்களுக்கான நிவாரணங்களை முழுமையாகத் தருவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாறுவதை விட நம்மை நாமே தயார்படுத்திக் கொள்வது இந்த காலகட்டத்தில் பொருத்தமாக இருக்கும்.

இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் சமுர்த்தி நிவாரணம், பத்தாயிரம் கடன் போன்ற விடயங்கள் கூட செயற்பாடுகளில் இல்லை. சொன்னது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது.

இந்த கொரோனா காரணமான ஊரடங்கு மூலம் நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், விவசாயிகளினதும் மீன் தொழில் செய்பவர்களினதும் உற்பத்திதான் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எமது மக்களைக் காப்பாற்றி வருகிறது.

அதனால், விவசாயம், மீன் பிடி, மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளை மேலும் அதிகமாக ஊக்கப்படுத்த வேண்டும். ஒரு வீட்டில் தங்களிடம் உள்ள தண்ணீர் வளங்களை வைத்துக்கொண்டு ஆகக் குறைந்தது சிறிய வீட்டுத் தோட்டங்களைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

அதேபோல் கூட்டு பயிர்ச்செய்கைக்கு அனைவரும் திட்டமிட வேண்டும். மரவள்ளி கிழங்கு உட்பட சகல பயிர்ச் செய்கைகளையும் செய்வதற்கு மக்கள் தயாராக வேண்டும்.

அரசாங்கம் உள்ளுரில் செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை வெளியில் இருந்து இறக்குமதி செய்வதில்லை என்ற தீர்மானங்களை எடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் உள்ளுர் உற்பத்திகளை நம்பித்தான் நாம் வாழ வேண்டியளவர்களாக இருக்கின்றோம்.

எனவே எங்களது உள்ளுர் உற்பத்திகளை அடிமட்டத்தில் இருந்து அதைச் செய்வதற்கு தூண்ட வேண்டும். இதனை மேற்கொள்வதன் மூலம் எதிர்கால பட்டினிச் சாவில் இருந்து தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.