அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அலுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.எனினும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சிகை அலங்கார நிலையம் ஹோட்டல்கள் என்பன மூடப்பட்டிருந்தன.
கடந்த தினங்களுக்கு முன்னர் இம்மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. ஆனால் இன்றைய தினம் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம் ,உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டன.
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸார் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினர்.
எனினும் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. அத்துடன் சந்தாங்கேணி மைதானத்தில் தற்காலிக திறந்த சந்தை ஒன்று நிறுவப்பட்டிருந்தது.மேலும் சில வியாபார நிலையங்கள் சுப்பர்மார்க்கெட்டுகள் பாமசிகள் வங்கிகள் எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.
எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை