பிரிட்டனில் பசித்திருப்போரின் நெருக்கடி அதிகரிப்பு: 1.5 மில்லியன் மக்களுக்கு நாள் முழுவதும் உணவு இல்லாத நிலை..

பிரிட்டனில் பசி நெருக்கடி துரிதமாக அதிகரித்து வருவதுடன் 1.5 மில்லியன் மக்கள் நாள்முழுதும் உணவு இல்லாத நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என என உணவுத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் எச்சரித்துள்ளன.

பிரிட்டன் முடக்கப்பட்டு 3 கிழமைகளேயான நிலையில், உண்ணுவதற்கு உணவு இல்லாமலோ அல்லது உணவு கிடைக்காமலோ 1.5 மில்லியன் பிரிட்டிஸ் மக்கள், நாள்முழுவதும் உண்ணாமல் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என உணவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

வீட்டில் இருக்கும் 3 மில்லியன் வரையிலான மக்களில் சிலர் உணவைத் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொற்றுநோயால் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வருமானத்தை இழந்துவிட்டதாக தெரிவித்தனர், அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தங்களுக்கு எந்த அரசாங்க உதவியும் கிடைக்காது என்று நம்புகின்றனர்.

“நெருக்கடி மிகப் பெரியது. உணவு வங்கிகளும், உள்ளூர் அதிகாரிகளும் நிதி இல்லாதநிலையில் விடப்பட்டுள்ளார்கள். உணவை நேரடியாக வாங்க முடியாத குடும்பங்களுக்கு நேரடியாக பணத்தை வழங்க மத்திய அரசிடமிருந்து அவசர மற்றும் கணிசமான முதலீடு தேவைப்படுகிறது” என இந்த உணவு அறக்கட்டளையின் இயக்குநர் அன்னா ரெய்லர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த மூன்று வாரங்களில் பசியால் அவதியுறுவதாக சொல்லப்படும் எண்ணிக்கையானது அண்மைய ஆண்டுகளில் ஒரு ஆண்டு முழுவதும் பசியால் அவதியுறுபவர்களின் எண்ணிக்கையிலும் விட 1.5 முதல் இரண்டு மடங்கு அதிகம் என லண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஊட்டச்சத்து தொடர்பான விரிவுரையாளராகவிருக்கும் கலாநிதி ராச்சேல் லூப்ஸ்ரா தெரிவித்துள்ளார்.

சுயதனிமைப்படுத்தலாலும் பொருளாதாரக் காரணங்களாலும் தேவையான உணவைப்பெறுவதில் மக்களுக்குள்ள இயலுமை மிகமோசமான அழிவுதரும் வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் பாதுகாப்பும் இந்த வைரசால் அதிக ஆபத்திலிருப்பவர்கள் ஆதரவைப் பெறுவதை உறுதிப்படுத்துவதும் தங்களது முதன்மைக் கடமையென்றும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு மக்கள் வீடுகளில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றும் அரசாங்கம் தொடர்பில் பேசவல்லவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.