தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணி!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.

இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே வலிகாமம் பகுதியில் இன்று இவர்களின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. வலி.காமம் பகுதியில் இவர்களின் செயற்பாட்டுக்கு தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தூரன் கந்தசாமி என்ற கருணை உள்ளங்கொண்ட அன்பரும் அனுசரணை வழங்கி இவர்களின் இந்த வறுமை ஒழிப்புப் பணிக்கு உதவியுள்ளார்.

தமிழ் சி.என்.என். , புதிய சுதந்திரன் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியால் முன்னெடுக்கப்படும் இந்த பாரிய செயற்பாடு, தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரியரும் வலிகாமம் வடக்கு பிரதேசசபை உறுப்பினருமான லயன் சி.ஹரிகரனால் வலிகாமம் பகுதியில் நெறிப்படுத்தப்பட்டது.

இரண்டு ஆயிரம் ரூபா பெறுமதியான 30 உலர் உணவுப் பொதிகள் இன்று தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம், கொல்லங்கலட்டி, தொட்டிலடி ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரியருடன் வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், தமிழ் சி.என்.என். குழும உறுப்பினர்களான புவிராஜ், வினுசன் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் பா.மரியதாஸ், வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஷன், இலங்கைத் தமிழரசுக் கட்சி மகளிர் அணி உறுப்பினர் துஷ்யந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம் பகுதிகளில் சுயதொழில் இழந்த மக்களின் வீடுகளைத் தமிழ் சி.என்.என். குழுமத்தினர் நாடிச்சென்று உதவிகளை வழங்கியுள்ளனர்.

இதேவேளை, தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணிகள் அதன் தலைமையகம் அமைந்துள்ள தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழங்கப்படுவதுடன், தீவகம், யாழ்ப்பாணம், வலிகாமம் என பரவலாக வழங்கப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.