பொதுத்தேர்தலை ஒத்திவைக்க அரசைக் கோரும் கூட்டமைப்பு! விரைவில் பகிரங்க அறிக்கை

“இலங்கையில் கொரோனா வைரஸ் கொடூரத்தின் ஆபத்து முற்றாக நீங்கும் வரை நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் முயற்சியை முன்னெடுக்க வேண்டாம். அந்தப் பேரிடர் நீங்கிவிட்டது என்ற நிலைமை உறுதியான பின்னரே ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.”

– இப்படி அரசையும், ஜனாதிபதியையும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாகக் கோரும் எனத் தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மூன்றினதும் தலைவர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூவருடன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சேர்ந்து ஒப்பமிட்டு கூட்டாக இந்தக் கோரிக்கையை முன்வைப்பர் எனத் தெரிகின்றது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான விவரிவான உரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன என்று தெரிகின்றது.

கொரோனா வைரஸ் ஆபத்து நீங்க முன்னர் பொதுத் தேர்தலை நடத்த எத்தனிக்கும் ஆபத்தான விளையாட்டில் இறங்க வேண்டாம் என்று தென்னிலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகள் பலவும் அரசையும், ஜனாதிபதியையும் கோரி வரும் நிலையில் அத்தகைய கோரிக்கைகள் எதுவும் இன்னும் தமிழர் தரப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை என்பது தெரிந்ததே.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.