கைவசம் போதுமானளவு பணம் இல்லாததால் குறைந்தளவிலேயே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்த மலையக மக்கள்…

க.கிஷாந்தன் 

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (16.04.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக  தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர்.

ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு  பிறகு இன்று காலையே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதால் அண்மைய நாட்களை விடவும் இன்று சனக்கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஆனால் கைவசம் போதுமானளவு பணம் இல்லாததால் குறைந்தளவிலேயே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர்.

ச.தொ.ச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். மருந்தகங்களுக்கு முன்னாலும் நீண்ட வரிசை இருந்தது.

அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பொகவந்தலாவ  ஆகிய நகரங்களில் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை காணக்கூடியதாக இருந்தாலும் ஒரு சிலர் எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றவில்லை.

நகரப்பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், ரோந்து நடவடிக்கையிலும் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

அதேவேளை, மலையகத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகல்வேளையில் அடை மழை பெய்வதால், மழைக்கு முன்னர் வீடு திரும்ப வேண்டும் என்பதில் மக்கள் தீவிரமாக இருந்தனர். ஒரு சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் மக்கள் காத்திருந்ததை காணமுடிந்தது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.