அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா மானியம் வழங்குக!

அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபா மானியக் கொடுப்பனவை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிலோன் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ மஜீட் மற்றும் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் ஆகியோர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகவியலாளர்கள் அரச துறை மற்றும் தனியார் துறைகளில் தமது தொழில்களை மேற்கொள்ளும் அதேநேரம் பகுதி நேரமாக ஊடகவியல் தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்க தொழில் புரியும் ஊடகவியலாளர்களுக்கு மானிய கொடுப்பனவை வழங்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகளில் ஊடகவியல் சேவையும் ஒன்றாக கருதப்படுகின்றது.
இதேவேளை அத்தியாவசிய சேவையாக கருதப்பட்ட ஏனைய அனைவருக்கும் மானிய கொடுப்பனவு வழங்கப்படும் இதேநேரம் ஊடகவியலாளர்கள் மாத்திரம் இவ்வாறு வேறுபடுத்தி பார்க்கப்படுவது கவலை அளிப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அர்ப்பணிப்பான சேவையாற்றிய அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.