பாடசாலைகளை மீள திறப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாக மிகச் சிறந்த பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிபுணர்களும் புத்திஜீவிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், சட்டவல்லுநர் பேராசிரியர் சாவித்திரி குணசேகர, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கல்வி தொடர்பான நிபுணர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே, சர்வதேச சிறுவர் மற்றும் மகளிர் உரிமைகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் தினேஸ் கீர்த்திநந்த ஆகியோரின் கையொப்பத்துடன் இந்த கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நோபல் திட்டத்தின் தலைவர் மற்றும் முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் சிதத் வெத்தமுனி உள்ளிட்ட கல்வி, மருத்துவத்துறையை சேர்ந்த நிபுணர்களும், தொழிற்சங்கங்களை சேர்ந்த 13 பேரும் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

பொறுப்பற்ற வகையில் எதிர்வரும் 11ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டாம் என அவர்கள் கோரியுள்ளனர்.

அதேபோல, பாடசாலைகளை திறக்கும் போது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறைக்கு சேவை வழங்குனர்களாக செயற்படுவோர் ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய அடிப்படை விடயங்களை பின்பற்றுதல் வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வௌிப்படைத்தன்மையுடன் சுகாதார அதிகாரிகளால், கல்வி அமைச்சு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மாணவர்கள் மற்றும் ஏனைய பிரஜைகளுக்கும் பாதுகாப்பான சூழல் தொடர்பில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றை இல்லாதொழிப்பது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள் அடங்கிய முழுமையான திட்டங்களை அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனநிலை, உடல் ரீதியான துன்புறுத்தல்கள் இன்றி பால், மதம் வேறுபாடின்றி பாதுகாப்பான, பிள்ளைகளுக்கு தமது கல்வியை தொடர்வதற்கு தேவையான சூழலை உருவாக்கி, அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதிக்கு நிபுணர்கள் குழுவால் அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.