கொரோனா வைரஸ் சுகாதார விழிப்புணர்வு-எச்சரிக்கை செய்யப்பட்ட கல்முனை பிரதேச வர்த்தகர்கள்!!!

பாறுக் ஷிஹான்
 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கல்முனை பிராந்தியத்தில்  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி   விழிப்புணர்வு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதுடன் சுகாதார நடைமுறையை கடைப்பிடிக்காதவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

வியாழக்கிழமை(23) நண்பகல் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்வின் தலைமையிலான  பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் பொலிஸார் இணைந்து  இச்சுகாதார விழிப்பூட்டல் செயற்பாட்டில் ஈடுபட்டனர்

குறிப்பாக  இலங்கை போக்குவரத்து பேருந்துகள்  தனியார் போக்குவரத்து பேருந்துகள் வழிமறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு சாரதி மற்றும் பஸ் நடத்துனருக்கு சுகாதார நடைமுறை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.தொடர்ந்து வீதிகளை அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு எச்சரிக்கையும் அவ்விடத்தல் விடுக்கப்பட்டது.அப்பகுதியில் உள்ள பிரபல  உணவகங்களுக்கு   திடிரென சென்ற இக்குழுவினர் சுகாதார நடைமுறையை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் மக்களின் நலன் கருதி சுகாதார நடைமுறையை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அடுத்து தனியார் கடைத்தொகுதி தனியார் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் சேவை நிலையங்களுக்கும் சென்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்பு கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு  அம்பாறை பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் இடம்பெற்றன. வழமையைவிட பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பொதுமக்களின் விகிதம் மிக்கக்குறைந்து காணப்பட்டதை காண முடிந்தது.

இந் நிலையில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்வின் தலைமையிலான  கல்முனை பிராந்திய பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் பஸ் வண்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முகக்கவசம் அணியுமாறும், பஸ்சில் சமூக இடைவெளியை பேணுமாறும் கூறி விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன்  முகக்கவசம் அணியாது பஸ்சில் பயணிக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.

விசேடமாக  கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில்  பல இடங்களுக்கு  ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் வண்டி பயணிக்க தயாரான நிலையில்  கல்முனை பஸ் நிலையத்தின் நேரமுகாமையாளரிடம் இக்குழுவினர் சுகாதார நடைமுறையை கவனிக்குமாறு அறிவுரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.