மாணவர்களுக்கான பரீட்சைகளையும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதையும் ஒத்திவைக்க வேண்டும். கல்வி அமைச்சர்களுடன் பேச்சு -மாவை.சோ.சேனாதிராசா-

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பரீட்சைகள், தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஓகஸ்ட்டில் நடைபெறும் என்றும்;, “மே” 11ந் திகதி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்றும் உயர்கல்வி, பாடசாலைக் கல்வி அமைச்சுக்கள் அறிவித்துள்ளன.

நேற்று 24/04 மாலையில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களுடனும் இன்று 25/04 காலை உயர்கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமா அவர்களிடமும் மேற்படி விடயங்கள் பற்றி பேசுவதற்குச் முன் செய்தி கொடுத்திருந்தேன். தொலைபேசி மூலம் என்னுடன் பரீட்சைகள் நடத்துவது தொடர்பிலும், பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் திறப்பது பற்றியும் விரிவாகப் பேசியிருந்தார்கள். கொரோனா வைரஸ், ஊரடங்கு நிலமைகள் பற்றியும் விபரங்களைக் கேட்டறிந்தனர்.

இளம் சமூகத்தினர் குறிப்பாக மாணவர் சமூகம் இரவு பகலாக உலகம் முழுவதும், இலங்கையிலும் கொரோனா வைரஸ் (COVID-19) பற்றி இணையத்தளங்கள், பத்திரிகைகள், செய்திகள் நாள் முழுவதும் கேட்பதும், பார்ப்பதும் முழுநாள் நிகழ்ச்சியாக இருக்கிறது. உளவியல் ரீதியாக மாணவர் சமூகம் நிச்சயம் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையே இருக்கிறது.

தற்பொழுது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு நடைமுறைகள் தொடர்கின்றன.

மருத்துவத்துறை நிபுணர்கள், அமைப்புக்கள் வற்புறுத்துகின்ற ஆலோசனைகளைப் பொருட்படுத்தாமல், ஜனாதிபதியும் அரசும் ஊரடங்கு நடைமுறையை விலக்குவதும், எதிர்மாறான நடைமுறைகளை கடைப்பிடிப்பதும் நாட்டில் ஒரு செயற்கையான சூழ்நிலைகளை உருவாக்கி கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்று பெருமைப்படுகின்றனர். அதன் மூலம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தருணம் வந்தவிட்டது என்ற ஒரு மாயையை மக்களிடம் ஏற்படுத்துகின்றனர். இந்த அறிவிப்புக்களும், நடவடிக்கைகளும் இப்பொழுது குறுகிய காலத்துக்குள் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து மக்களிடமும், இளம் சமூகத்திடமும் பெரும் அச்சத்தையே ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தீவிரத் தொற்றுக் காரணமாக அனைவரும் பெரும் அச்சம், ஆபத்தை அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினரிடையேயும் கடற்படையினரிடமும் கொரோனா வைரஸ் பரவி விட்டது.

இந் நிலமையில் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதையும் மாணவர்களுக்கான பரீட்சைகள் நடாத்துவதையும் ஒத்திவைக்க வேண்டும். இவ்வாண்டு இறுதி வரை மருத்துவ நிபுணர்களின் ஆய்வுகள், அறிவுறுத்தல்களை அறிந்து பின்பற்றி கல்வி நிறுவனங்களை ஆரம்பிப்பதையும் பரீட்சைகளையும் மேற்கொள்ளலாம்.

கல்வி நிபுணர்கள், தமிழர் ஆசிரிய அமைப்புக்கள் பரீட்சைகளைப் பிற்போடும்படியே கேட்டுள்ளனர். அவர்களுடனும் கூடி ஆராய்ந்து பொருத்தமான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று கல்வி அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அமைச்சர்களும் இவ்வேண்டுகோளை ஏற்று இணக்கம் தெரிவித்துள்ளனர்.

முதலில் 2020 மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதங்களுக்கிடையில் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், சிறுவர் பள்ளிகள், கல்விக் கட்டமைப்பிலுள்ளோர் மட்டத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் குழந்தைகளிடத்திலிருந்தே கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுவதும் அவசியமானதாகும் என வற்புறுத்துகின்றேன். மாவை.சோ.சேனாதிராசா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.