நாடாளுமன்றத்தைக் கூட்டக் கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை கோட்டாபயவால் நிராகரிப்பு – தேர்தல் தோல்விப் பயத்தாலே அவர்கள் அப்படிக் கேட்கின்றனர் எனவும் தெரிவிப்பு


“கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் போராட்டத்தில் சகல எதிர்க்கட்சிகளும் எம்முடன் இணைந்து பணியாற்றலாம். அதை நாம் மனதார வரவேற்போம். அதற்காகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருவதில் எந்த நியாயமும் கிடையாது. எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடுவதற்காகவே பழைய நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு வலியுறுத்துகின்றனர். தேர்தல் தோல்விப் பயத்திலேயே அவர்கள் இருக்கின்றனர். எனவே, அவர்களின் நோக்கங்களை என்னால் நிறைவேற்ற முடியாது.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீள கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகள் மற்றும் அணிகள் பல ஒன்றிணைந்து, ஜனாதிபதிக்கு கூட்டு யோசனையொன்றை நேற்று மாலை கையளித்துள்ளன. இதில், மீண்டும் நாடாளுமன்றம் மீள கூட்டப்பட்டால் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும், தமது மாத கொடுப்பனவுகள் கூட வேண்டாம் என்றும் உத்தரவாதமளித்துள்ளனர். அத்துடன், எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசைக் கவிழ்க்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளன. சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க, இரா.சம்பந்தன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக இதில் கையொப்பமிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,

“இப்போதைய நிலைமையில் பலமான புதிய நாடாளுமன்றமே தேவை. எனவே, பழைய நாடாளுமன்றத்தை மீளக்கூட்டவே முடியாது. அதற்கான அதிகாரமும் தற்போதைய அரசமைப்பில் இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில், தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. குறித்த திகதியில் தேர்தலை நடத்தக்கூடிய சூழல் இல்லையெனில் அதை மேலும் பிற்போட முடியும். அதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலை உரிய காலத்துக்குள் விரைந்து நடத்துவதே எனது நிலைப்பாடு. இதிலிருந்து நான் பின்வாங்கவே மாட்டேன்.

கலைக்கப்பட்ட பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டைக் குழப்பமான நிலைக்குத் தள்ள வேண்டாம் என்று சில தினங்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த மகா சங்கத்தினர் கோரியிருந்தனர். அதேவேளை, சிவில் சமூகத்தினரும் இந்தக் கோரிக்கையை என்னிடம் முன்வைத்திருந்தனர். நாட்டின் நலன் கருதிய அவர்களின் கோரிக்கைகளை நான் மனதார வரவேற்றேன்.

எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடுவதற்காகவே பழைய நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு வலியுறுத்துகின்றனர். தேர்தல் பயத்திலேயே அவர்கள் இருக்கின்றனர். எனவே, அவர்களின் நோக்கங்களை என்னால் நிறைவேற்ற முடியாது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.