சாவகச்சேரியில் வாள்வெட்டு – பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயம்

யாழ். சாவகச்சேரி மறவன்புலவில் இடம்பெற்ற வாள்வெட்டில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மறவன்புலவிலுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு நேற்றிரவு(புதன்கிழமை) 7.15 மணியளவில் சென்ற மூவர் கொண்ட குழுவினர் சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அரியகுட்டி நிமலறோகனும், அவரது மனைவியும் காயமடைந்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பிரதேச சபை உறுப்பினர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த உறுப்பினர் உரையாற்றிய பின்னணியிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த பிரதேச சபை உறுப்பினர் மறவன்புலவில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.