வவுனியா கடற்படை வீரரின் குடும்பத்தினருக்கு கொரோனா இல்லை- அறிக்கை வெளியானது

வவுனியா, மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தரின் குடும்பத்தினரான 8 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) குறிப்பிடுகையில், “வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

வவுனியா மகாகச்சகொடியைச் சேர்ந்த குறித்த கடற்படை வீரரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் என 9 பேர் பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து குறித்த 9 பேருக்குமான பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான மாதிரிகள் சேர்க்கும் பணி நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது. அதற்கான முடிவுகள் நேற்று வெளிவந்திருந்தன.

அதனடிப்படையில், கடற்படை உத்தியோகத்தரின் குடும்ப உறவினர்களான 8 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஒருவரின் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.