பிரதமருடனான சந்திப்பை புறக்கணிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பினை ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, பிரதமர் அழைத்த கூட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் 8 வது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களுக்கு இந்த சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையையும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு நிகரான நடவடிக்கையாக குறித்த கலந்துரையாடல் அமையாதபோதும் ஐக்கிய தேசியக் கட்சி அதில் பங்கெடுக்க தீர்மானித்தது. எனவே நாட்டில் சுகாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரசியல் செயற்பாடுகள் புறந்தள்ளப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையான கூட்டத்தில் எந்த அர்த்தமுள்ள உரையாடலும் நடத்த முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி கருதுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நேரத்தில் ஒற்றுமையாக செயற்படும் வேளையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்பட்டு வருகின்றது.

இருப்பினும் கொரோனா வைரஸினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அவர்களின் முயற்சிகளில் அரசாங்கத்திற்கு உதவ ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு செய்ய, எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் நாட்டின் அரசியலமைப்பிற்கு ஏற்ப இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.