சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து!
சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக சோமாலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
‘ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இ.எம்.பி- 120 (EMB-120) என்ற விமானமே நேற்று (திங்கட்கிழமை) மாலை இவ்வாறு விபத்துக்குள்ளானது.
தலைநகர் மொகடிஷூவில் இருந்து பார்தேல் நகருக்குச் சென்ற குறித்த விமானம், பார்தேல் விமான நிலையத்துக்கு சற்று தொலைவில் விபத்துக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமானி, துணை விமானி, விமான பொறியாளர் மற்றும் ஒரு பயிற்சி விமானி, அதே போல் விமான நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் முகமது சாலட் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்கான விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச உதவியை வரவேற்பதாகவும் அவர் கூறினார்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சோமாலியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
எனினும் இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை என அரசு நடத்தும் சோமாலியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை