‘குடும்பத்திற்கு 20 ஆயிரம் வழங்குங்கள்’ – அரசுக்கு வலியுறுத்தினார் சஜித்

கொரோனா நிவாரணத் தொகையாக, ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள எமது நாட்டு மக்களுக்கு, மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதானது, எந்தவொரு சூழ்நிலையிலும் போதாது என்பதை நான் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குறைந்தது 4 பேர் உள்ள குடும்பத்திற்கு கூட இந்தத் தொகை போதாது.

எனவே, குடும்பத்திற்கு தலா 20 ஆயிரம் ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.

அத்தோடு, ஒட்டு மொத்த மக்களே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளை அரசியல் மயமாக்காமல் இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கொள்கிறோம்.

மனிதத் தன்மையுடன் வரி செலுத்தும் மக்களுக்காக நாம் இவ்வேளையில் செயற்பட வேண்டும்.

பீ.சி.ஆர். பரிசோதனைகளை இன்னும் அதிகரிக்க வேண்டும்.

வைத்தியர்கள், முப்படையினர், அதிகாரிகள் என அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன்’ எனக்குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.