நாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை – உயர் நீதிமன்றம்

நாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

இடையீட்டு மனுதாரரான, சீத்தாவக்கை பிரதேச சபை உறுப்பினர் பிரதீப் குமார சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய, சட்டமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றம் இல்லாமல் ஒரு நாட்டின் ஆட்சி ஜனநாயக ரீதியாக இருக்க முடியாது, எனவே, மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட்ட வேண்டும் என கூறினார்.

ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்று 9 ஆவது நாளாகவும் மன்றில் பரிசீலிக்கப்பட்டது.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார,  சிசிரடி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர்  கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது தனது சமர்பணத்தை முன்வைத்த சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய, நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி அறிவிப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்றும் அதேபோல் அரசியலமைப்பின் 70 ஆம் சரத்தின் அடிப்படையில் நாடாளுமன்றம் மூன்று மாதங்களுக்குள் கூட வேண்டும் என்றும் கூறினார்.

குறிப்பாக கடந்த மார்ச் 2 ஆம் திகதி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி பிரகடனம், ஜூன் 2 ஆம் திகதிவரை மட்டுமே அதிகாரம் மிக்கதாக இருக்கும் என அவர் வாதிட்டார்.

இதன்போது தலையிட்ட மனுதாரர் பேராசிரியர் சுதந்த லியானகே சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி செயல் தன்னிச்சையானது அல்ல என்றும் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் கூடிவருவது போல் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது கட்டாயமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் ஜனாதிபதி முறைமை உள்ளது என்றும், அரசியலமைப்பு நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரத்தை அளித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை அடுத்து அனைத்து இடையீட்டு மனுக்கள் மீதான வாதங்களும் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மு.ப.10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.