கொரோனா இறக்குமதிக்கு ராஜபக்ச அரசே பொறுப்பு! – ஐக்கிய மக்கள் சக்தி பகிரங்கக் குற்றச்சாட்டு

இலங்கையில் கொரோனா வைரஸை இறக்குமதி செய்தமை தொடர்பில் ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும் என்று  ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று கொரோனா வைரஸின் பரவலால் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். மத்திய கிழக்கு, குவைத், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையர் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இதன் உண்மைத் தகவலை வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டுத் தூதரங்கங்களுடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டிலுள்ள இலங்கை ஊழியர்களை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மிக ஆர்வமுடன் அழைத்து வந்த ராஜபக்சவினர் தற்போது தாமதித்திருப்பதற்கான காரணம் என்ன?

இலங்கையில் எவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருந்தபோது விமான நிலையத்தை மூடிவைக்காமல் அதனைத் திறந்து வைத்திருந்தமையின் காரணமாகவே இங்கு வைரஸ் பரவல் ஏற்பட்டதுடன், மக்களும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸை இறக்குமதி செய்தமை தொடர்பில்  ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும். அரசின் கீழ் மட்டத்திலான அரசியல் இலாபம் கருதிய செயற்பாடுகளினால் வெளிநாட்டிலுள்ள  இலங்கையர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதுடன், சிறைக்குச் செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தமது குடும்பத்தின் முன்னேற்றத்துக்காகவே வெளிநாடுகள் சென்று பணிபுரிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இவர்களே அரச வருமானத்துக்கு நேரடியாகப் பங்காற்றுபவர்கள். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்த ரசின் கடமையாகும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.