ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முற்பட்டோருக்கு நீதிமன்ற தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டியுள்ளது – அங்கஜன்

மக்களின் ஜனநாயக பண்பியலுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை பிற்போட முயற்சித்தவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டி இருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினை சாதகமாகப் பயன்படுத்தி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும் அரசாங்ககத்தின் செயற்பாடுகளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தென்னிலங்கை மற்றும் மலையக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இவர்கள் நாட்டு மக்களையோ அல்லது நாட்டில் பரவியுள்ள வைரஸ் தாக்கத்தை எண்ணியோ கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரவில்லை.

இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான எம்.ஏ.சுமத்திரன் மக்களின் ஜனநாயக பண்பியல்புகளை இழுத்தடிப்பு செய்வதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு வாக்களித்த மக்கள் எதிர்நோகும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினை தொடர்பில் நீதிமன்றம் சென்று தீர்வினை பெற்றுக்கொடுக்காமல் தென்னிலங்கை ஆதரவு சக்திகளுடன் இணைந்து மக்களின் உரிய காலப்பகுதியில் பிரயோகிக்கப்படும் வாக்குரிமையை மழுங்கடிக்க முற்பட்டனர்.

தமிழ் மக்களுக்காக எந்த நிலையிலும் தமது நாடாளுமன்ற ஆசனங்களை தூக்கியெறியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தமிழ் மக்கள் தம்மை எதிர்வரும் தேர்தலில் தூக்கியெறிந்து விடுவார்களோ என்ற அச்சமே காரணம் என எண்ண தோன்றுகிறது.

ஆகவே உயர் நீதிமன்றத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையையும் தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்பட்ட தேர்தல் திகதியை சாவலுக்கு உட்படுத்தியும் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மீதான குறித்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துகொள்ளாமலேயே தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தமை ஜனநாயகத்தை உண்மையாக விரும்பும் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்” என அங்கஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.