கொவிட் – 19 தாக்கம் காரணமாக வவுனியாவில் மல்லிகை செய்கையாளர் பாதிப்பு

வவுனியா நிருபர்

கொவிட் – 19 தாக்கம் காரணமாக வவுனியாவில் மல்லிகைச் செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியாவில் விவசாய திணைக்களம் மற்றும் இந்திய துணைதூரகம் என்பவற்றின் அணுசரணையில் 10 பேர் வரையில் மல்லிகை செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.

ஒரு கிலோ மல்லிகை மொட்டு 3000 ரூபாய்க்கும், ஒரு முலம் பூ மாலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் மல்லிகைச் செய்கையாளர்கள் வருமானம் பெற்று வந்ததுடன், பலருக்கு தமது மல்லிகைத் தோட்டத்தில் வேலைவாய்ப்பையும் வழங்கியிருந்தனர். வெளிநாடுகளுக்கு மல்லிகைப் பூ ஏற்றுமதியும் இடம்பெற்றது.

ஆனால் கொவிட் 19 தாக்கம் காரணமாக ஊரடங்கு சட்ட அமுல், போக்குவரத்து தடை, திருமண நிகழ்வுகள், விசேட பூஜைகள் உள்ளிட்ட மங்கள நிகழ்வுகள் தடைப்பட்டமையால் மல்லிகைப் பூவுக்கான கேள்வி இல்லாமல் போயுள்ளது. இதனால் மரத்தில் பூத்து குலுங்கும் மல்லிகை வாடி நிலத்தில் விழுவதாக செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில்  வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மரையடித்தகுளம் கிராமத்தில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பமான சாருமதி தெரிவிக்கையில், விவசாய திணைக்களத்தினால் 2 வருடங்களுக்கு முன்னர் 50 மல்லிகைக் கன்றுகள் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டது.  அதனைக் கொண்டு 0.25 ஏக்கர் (கால் ஏக்கர்) நிலப்பரப்பில் அதனை நட்டதுடன், மேலும் மல்லிகைச் செடிகளை பதி வைத்து தற்போது 300 வரையான கன்றுகளை நாட்டினேன். இம் மல்லிகை மூலம் 40 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானத்தை மாதாந்தம் பெற்று வந்ததுடன், நான்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியிருந்தேன்.  தற்போது கொவிட் 19 இன் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார்.

தமது குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மல்லிகைச் செய்கையாளர்கள், தமக்கு சந்தை வாய்ப்பு வசதியை ஏற்படுத்தி தருமாறும், அதன் மூலம் மேலும் பல குடும்பங்களை வாழ வைக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.