மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்துவருகின்றது – ஜனாதிபதி

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்துவருகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சுற்றாடல் பாதுகாப்பு பற்றி உலக மக்களுக்கு அறிவூட்டுவதற்காகவும் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பாக கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை பெறும் நோக்குடனும் ஒவ்வொரு வருடமும் ஜுன் 5ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்துவருகின்றது. பண்டைய காலம் முதல் இலங்கை மக்கள் சுற்றாடலுடன் பேணி வரும் ஆழமான உறவு எமது மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்கு வழிசெய்துள்ளது.

அவ்வாறு சூழலுடன் நல்லிணக்கமாக கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ஒரு தேசத்தின் எதிர்கால தலைமுறைக்கு சுற்றாடல் பற்றிய எமது கடந்த கால அறிவு ஞானங்களையும் தற்போதைய சுற்றாடல் பிரச்சினைகள் பற்றிய தெளிவையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இன்று முன்னெப்போதைப் பார்க்கிலும் நன்குணரப்படுகின்றது.

வெள்ளம், மன்சரிவுகள், பனிப்பாறைகள் உருகுதல், வளி மாசடைதல், புவி வெப்பமாதல் அதிகரித்தல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு சுற்றாடல் பிரச்சினைகள் மனித செயற்பாடுகளின் நேரடி விளைவுகளாகும். சுற்றாடல் அழிவு மனிதனது எதிர்கால இருப்புக்கு பெரும் சவாலானதாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக உருவாகியுள்ள முன்னெப்போதுமில்லாத பூகோள பிரச்சினை சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மனிதனுக்கு உறுதியாக உணர்த்தும் சந்தர்ப்பம் என்றே நான் கருதுகின்றேன்.

பேண்தகு சூழலியல் மூலோபாயமொன்றின் தேவை ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தின் மூலம் இனம்காணப்பட்டது. காணி முகாமைத்துவம், உயிர் பல்வகைமையை பாதுகாத்தல், தேசிய வனப்பகுதியை அதிகரித்தல், விஞ்ஞானபூர்வமான கழிவு முகாமைத்துவம் மற்றும் சூழல் நேய குடியேற்றங்கள் ஆகிய அதில் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றாடல் பாதுகாப்பு வழிகளை யதார்த்தமாக்குவதற்கு எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

‘உயிர் பல்வகைமை – இயற்கைக்கான இடம்’ என்ற கருப்பொருளின் கீழ் இலங்கையில் இடம்பெறும் உலக சுற்றாடல் தின நிகழ்வு முழுமையாக வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.