பி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்த அமெரிக்கத் தூதரகப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை
பி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்து நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளாரென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அரசுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த பெண் அதிகாரி டுபாயிலிருந்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அவர் மறுத்தமை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையிலேயே, அவர், தனிமைப்படுத்தப்பட உள்ளாரென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை இந்நாட்டுக்கு வருகை தரும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், அவர்கள் வருகை தரும் நாட்டில் 72 மணித்தியாலங்களுக்கு முன் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க தவறும் அனைத்து இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு பரிசோதனைகளுக்கு முகம் கொடுக்காத குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் மீது தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை