தேர்தலைக் கண்காணிக்கும் ஜனாதிபதியின் விசேட செயலணி புலனாய்வு அதிகாரிகள் 20 ஆயிரம் பேர் களத்தில்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க ஜனாதிபதி நியமித்துள்ள விசேட செயலணி கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. இதற்கான கண்காணிப்புச் செயற்பாடுகளில் நாடு பூராகவும் 20 ஆயிரம் புலனாய்வுத் துறையினர் கடமைகளில் அமர்த்தப்படவுள்ளனர்.

பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி இன்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படாது போனாலும்கூட எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் தேர்தலை நடத்த முடியும் என்ற எதிர்வுகூறல்களை தேர்தல்கள் ஆணைக்குழு கூறி வருகின்றது.

எவ்வாறிருப்பினும் நாளைமறுதினம் திங்கட்கிழமை தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான ஆயத்தங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஆராயவுள்ளது.

இந்தநிலையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலைக் கண்காணிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட நடவடிக்கைகள் சிலவற்றை முன்னெடுத்துள்ளார்.

சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சரவை இணைந்த கொரோனாத் தடுப்பு செயலணி வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இம்முறை சுகாதார வழிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும், அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டால் அவர்களும் முழுமையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றிச் செயற்பட வேண்டும் எனவும் செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த ஜனாதிபதி கடந்த வாரம் நியமித்த விசேட செயலணியை இம்முறை தேர்தல் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுத்தவுள்ளார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலும் இது குறித்து ஜனாதிபதி அமைச்சர்களுடன் பேசியுள்ளார். ஆகவே, இம்முறை பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில்  நடத்தப்படுவதற்கான  சாத்தியங்கள் அதிகமாக உள்ள காரணத்தால் இப்போதே தேர்தல் கண்காணிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும், அதற்கான ஜனாதிபதி செயலணி தமக்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயராக வேண்டும் எனவும் செயலணி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்று அரச தரப்பில் இருந்து தெரியவருகின்றது.

மேலும் நடைபெறவுள்ள  பொதுத்தேர்தலில் சகலரும் சுகாதார வழிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து நோய் பரவல்களில் இருந்து விடுபடும் விதத்தில் செயற்படுகின்றனரா என்பதை இரகசியமாகக் கண்காணிக்க நாட்டின் சகல பகுதிகளுக்கும் சுமார் 20 ஆயிரம் புலனாய்வு அதிகாரிகள் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளனர் எனவும், தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாள முப்படைகளையும் பயன்படுத்த ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார் எனவும் விசேட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களில் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.