அரசியல் தீர்வுக்கான திட்டம் உள்ளது…. தமிழர்களுக்கு தீர்வு உறுதி என்கின்றார் பிரதமர்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய நாடாளுமன்றத்தில் பேச்சுக்களை ஆரம்பிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் அரசியல் தீர்வு தொடர்பான திட்ட வரைவு தயாரிக்கப்படும் என்றும் அதை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பல ஊடகங்கள் பல செவ்வி கண்டுவருகின்றன. அந்தவகையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் கருத்து தெரிவித்திருந்த அவர், இதுவே அரசியல் தீர்வு தொடர்பான தன்னுடையதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக இருக்கின்றது எனக் கூறியுள்ளார்.

தமிழ் மக்களுக்குத் தீர்வை நாம்தான் வழங்க வேண்டும் என தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகள் வந்து தீர்வு தரும் என்று எவரும் நம்பக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

ஏனெனில் இது உள்நாட்டுப் பிரச்சினை என்றும் நாம்தான் பேசித் தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் எம்முடன் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றார்களோ அவ்வளவு விரைவாக தீர்வை நாம் காணமுடியும் என்றும் கூறியுள்ளார்.

ஒற்றுமையாகவும் நெருக்கமாகவும் இருந்தால்தான் எதனையும் சாதிக்க முடியும் என தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ முரண்பட்டு நின்றால் எந்தப் பயனும் இல்லை என தெரிவித்துள்ளார்.

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதியும் தானும் ஆராய்ந்து வருவதாகவும் அவர்களில் பாரிய குற்றங்களை புரிந்தவர்களை விடுவிக்க போவதில்லை என்றும் விடுவிக்க கூடியவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் அவர்கள் அரசியல் கைதிகள் தொடர்பான பெயர்பட்டியலை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஊடகவியாளர்கள் படுகொலைக்கு தனது அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ இவை அரசின் தேவைக்காக இடம்பெறவில்லை என்றும் ஊடகவியலாளர்களை ஒடுக்கும் எண்ணம் தமக்கில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.