ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு கோரவில்லை – அமெரிக்கத் தூதரகம்
ஜோர்ஜ் புளொய்டின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து முன்னிலை சோசலிஷக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு கோரவில்லை என அமெரிக்கத் தூதரகம், தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டி, மினிசோட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் பொலிஸாரால் கழுத்து நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அமெரிக்க உட்பட உலகின் பல பாகங்களிலும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இச்சம்பவத்திற்குக் கண்டனம் வெளியிடும் வகையில் நேற்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக, முன்னிலை சோசலிஸக் கட்சியினார் அமைதிப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
இதற்கு எதிராக ஆரம்பத்திலேயே பொலிஸாரினால் நீதிமன்றத்தடையுத்தரவு பெறப்பட்டிருந்த நிலையில், அதனைமீறி அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், ஆர்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவமானது, நாட்டில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்விடயம் குறித்து தமது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்தி அமெரிக்கத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதில், அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான அனைத்து இலங்கை மக்களது உரிமையை அமெரிக்கா ஆதரிப்பதாகவும், அது இருநாடுகளுக்கும் இடையில் பகிரப்பட்ட ஜனநாயகப் பாரம்பரியத்திற்கு இசைவானதாகும் என்றும் தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்த ஆர்ப்பாட்டம் தடுக்கப்பட வேண்டுமென்று தாம் கோரவில்லை என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வழமைபோன்று நாட்டிலுள்ள இராஜதந்திர அதிகாரிகளையும், ஸ்தாபனங்களையும் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினாலும், உள்நாட்டு சட்ட அமுலாக்கத்துறையினாலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வரவேற்பதாகவும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை