நாடாளுமன்ற தேர்தலினை புறக்கணிக்கும் நிலையேற்படும் – பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் எச்சரிக்கை!

இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்க நடவடிக்கையெடுக்காவிட்டால் தங்கள் குடும்பங்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை புறக்கணிக்கும் நிலையேற்படும் என எச்சரித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தினால் இன்று(புதன்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தின் இணைப்பாளர் கமல்ராஜ் தலைமையில் இந்த மகஜர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தேர்தலை காரணம் காட்டி இடைநிறுத்தப்பட்ட தமது நியமனங்களை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வழங்குமாறு கூறியிருந்தபோதிலும் இதுவரையில் அரசாங்கம் வழங்க நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் இதன்போது இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்க இணைப்பாளர் கமல்ராஜ் தெரிவித்தார்.

அரசியல் நியமனங்களாக இல்லாமல் முறையாக பரீட்சைகள் நடாத்தப்பட்டு வழங்கப்பட்ட தமது நியமனத்தினை வழங்குவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக பின்னடித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தாங்கள் வேறு தொழிலில் இருக்கும்போத அந்த தொழிலை இராஜினாமா செய்துவிட்டே இந்த நியமனத்தினை பெற்றுக்கொண்டதாகவும் தமது நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டு ஒரு வருடத்தினை கடந்துள்ள நிலையிலும் தமது குடும்பம் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இங்கு இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் தெரிவித்தனர்.

எமது நியமனத்தினை இடைநிறுத்தி இன்று நடுவீதியில் எங்களை நிறுத்தியுள்ள அரசாங்கம் எங்களை வேறு வழிக்கு கொண்டுசெல்ல எத்தனிக்கவேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் கூடிய கவனம் எடுத்து தமக்கான நியமனத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

இதற்குரிய தீர்வினை விரைவாக வழங்காதுபோனால் இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தின் 6547 குடும்பங்களும் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதுடன் மாற்றுவழியினை கையாளவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் எனவும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.