தமிழ் மருத்துவரின் கொரோனா மருந்து கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் வசந்தகுமார் கண்டுபிடித்த 2 ரூபாய்க்கான கொரோனா மருந்து குறித்து விரைவாக பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வைத்தியர், சென்னை உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில் நீதிமன்ற்ம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வைத்தியரின் மனுவில், “கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபைக்கு மனு அனுப்பியுள்ளேன்.

ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபைக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று காணொலிக்காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ‘மனுதாரர் கண்டுபிடித்துள்ள ‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளக்கர்ஸ்’ மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும். இந்த மருந்தின் விலை 2 ரூபாய்க்குக் குறைவானதுதான். இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி, காய்ச்சலாக மாறாமல் தடுக்கும். இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த ஆய்வு அறிக்கையை மனுதாரர் மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபைக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்க வேண்டும் எனவும் இந்த ஆய்வு அறிக்கையை பரிசீலித்து மருத்துவ சபையும் மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.