சர்வாதிகார ஆட்சி பற்றி விமர்சிக்க கூட்டமைப்புக்கு உரிமை கிடையாது – இப்படிக் கூறுகின்றது கோட்டா அணி…

“அரசு இராணுவ ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். கூட்டமைப்பினருக்கு சர்வாதிகார ஆட்சி முறைமை தொடர்பில் கருத்துரைப்பதற்கு – விமர்சிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகாவான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. பி. ரத்நாயக்க தெரிவித்தார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசை விமர்சித்து தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குரிமையை பயனற்றதாக்கவே எதிர்த்தரப்பினர் முயற்சிக்கின்றார்கள்” எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது தான் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், கணிசமான அளவே அவர்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றது. எனினும், ஜனாதிபதி அனைத்து மக்களுக்கும் பொதுவான  அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்.

அரசு ஒருபோதும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மறுக்கவில்லை. அத்துடன் இராணுவ ஆட்சி முறையை முன்னெடுத்தும் செல்லவில்லை. சர்வாதிகார ஆட்சி தொடர்பில் கருத்துரைக்கும் – விமர்சிக்கும் தார்மீக உரிமை கூட்டமைப்பினருக்குக் கிடையாது.

எதிர்த்தரப்பினர் அரசுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நம்பி தமிழ், முஸ்லிம் மக்கள் இம்முறை ஏமாறக்கூடாது.

நல்லாட்சி அரசை ஸ்தாபித்ததன் பயனை சிறுபான்மை மக்கள் பெறவில்லை. மாறாக  பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளானார்கள்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குத் தமிழ், முஸ்லிம் மக்கள் முழுமையான ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.