அரசியல் தீர்வுப் பேச்சுக்கு தமிழ்க் கூட்டமைப்பு தயார் நம்பும் வகையில் அரசே நடக்கவேண்டும்; மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதில்

“தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவேளையிலும் மஹிந்த அரசுடன் பேசத் தயாராக இருக்கின்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறுவது போன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாங்கள்தான். எனவே, எமது மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் நாம் ஒருபோதும் செயற்படமாட்டோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“அரசுதான் நம்பும் வகையில் முதலில் செயற்பட வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களும் நாமும் அரசை நம்பி அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய நாடாளுமன்றத்தில் பேச்சுகளை ஆரம்பிப்போம். அந்தப் பேச்சுகளின் பிரகாரம் அரசியல் தீர்வு தொடர்பான திட்ட வரைபு தயாரிக்கப்படும். அதை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம் வழங்கியே தீருவோம். எனவே, தமிழ் மக்கள் முதலில் எங்களை நம்ப வேண்டும்’ என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

தனது அரசியலில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்தமையையொட்டி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்துக்கு இரா.சம்பந்தன் நேற்றுப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசியல் தீர்வே தமிழர்களின் பிரதான குறிக்கோள். இதற்காக எத்தனையோ தியாகங்களை நாம் செய்திருக்கின்றோம். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அர்த்தபுஷ்டியான தீர்வையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். கடந்த அரசில் இதை அடைவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டோம். அதற்காக புதிய அரசமைப்புக்கான பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படடன. எனினும், திடீரென நிகழ்ந்த அரசியல் சூழ்ச்சியால் அந்தப் பணிகள் தடைப்பட்டன. எனவே, புதிய அரசமைப்புக்கான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதே எமது அவாவாக இருக்கின்றது. புதிய நாடாளுமன்றம் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்திச் செயற்பட வேண்டும். அதற்காக அரசுக்கு சகல ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்குவோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.