இலங்கையில் சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படும் சுற்றுலாத் தலங்கள்

தேசிய மிருகக்காட்சிசாலை, தேசிய பூங்காக்கள் என்பன உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீள திறக்கப்படவுள்ளன.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பரவியதைத் தொடர்ந்து தேசிய மிருகக்காட்சிசாலை, பூங்காக்கள் என்பன கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடு வழமைக்கு திரும்பி வரும் நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில், அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை, சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகளுடன் வாகன சாரதிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தேசிய பூங்காக்களுக்கு நுழைவதற்கு அனுமதியளிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையினையும் மட்டுப்படுத்துவதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சுற்றுலா சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், யால மற்றும் உடவளவை தேசிய பூங்காக்களில் நாள் ஒன்றுக்கு நுழைய கூடிய அதிகபட்ச வாகனங்களின் எண்ணிக்கை 150 என வரையறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின்னேரியா, கவுடுல்ல மற்றும் வஸ்கமுவ தேசிய பூங்காக்களில் 50 வாகனங்களும் வில்பத்து தேசிய பூங்காவிற்குள் நுழைவதற்கு 80 வாகனங்களும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவிற்குள் நுழைய 50 சுற்றுலா குழுவினர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் புறா தீவு தேசிய பூங்காவிற்குள் நாள் ஒன்றுக்கு 50 படகுகள் மாத்திரமே பயணிப்பதற்கு அனுமதியளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.