நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள் ..

2021.01.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. வெளிவிவகார அமைச்சின் விடயதானத்தின் கீழ் சர்வதேச ஒத்துழைப்புக்களுக்கான பிறிதொரு அலகை நிறுவுதல்

ஆசியாவை மையமாகக் கொண்டு வளர்ந்து வரும் பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்ப உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழல் மாற்றமடைந்து வரும் வேளையில் வலுவான பொருளாதார இராஜதந்திர அணுகுமுறைகளைப் பெற்றுக்கொள்வதற்காக முக்கிய அனைத்து நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு செய்வதற்காகவும் பொருளாதார இராஜதந்திர விடயங்களுக்கு ஏற்புடைய கொள்கை வகுப்புக்களுக்காகவும் பிறிதொரு அலகை வெளிவிவகார அமைச்சின் கீழ் நிறுவுவதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த துறைகளைச் சார்ந்த நிபுணத்துவர்கள் அடங்கலாக சர்வதேச ஒத்துழைப்புக்கான விசேட அலகொன்றை நிறுவுவதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கையின் (APTA) கீழ் மொங்கோலியாவுக்கான வரிச் சலுகையை வழங்கல்

இலங்கை அங்கத்துவத்தைக் கொண்ட ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கையின் (APTA) கீழ் மொங்கோலியா நாடு 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி அங்கத்துவ நாடாகத் தெரிவாகியுள்ளது. அதற்கமைய, அங்கத்துவ நாடாக இலங்கை மொங்கோலியா நாட்டுடன் வரிச் சலுகைப் பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறித்த வர்த்தக உடன்படிக்கையின் தரப்பினர்களான பங்களாதேசம், லாவோஸ் போன்ற நாடுகளுக்கு இலங்கை வழங்கியுள்ள, வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கு குறித்த உடன்படிக்கையின் கீழ் மொங்கோலியாவும் தகைமையை பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த வரிச் சலுகையை வழங்குவதற்கும், இருதரப்பினருக்குமிடையே மேலும் பரஸ்பர ஒத்துழைப்புடன் உடன்படக் கூடிய வரிச் சலுகைகளை அடையாளங் காண்பதற்காகவும் அந்நாட்டுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவும் வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. கொவிட் 19 தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கான சலுகை வழங்கல்

கொவிட் 19 தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை மற்றும் தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணப் பட்டியல் மற்றும் நீர்க் கட்டணப் பட்டியல் செலுத்துவதற்கு சலுகை வழங்குவதற்கு ஏற்புடையதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணுமாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வீட்டுமட்ட, வர்த்தக மற்றும் கைத்தொழில் மின்சாரப் பாவனையாளர்களுக்கு குறித்த காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணப் பட்டியலைச் செலுத்துவதற்காக பட்டியல் திகதியிலிருந்து 06 மாதங்களுக்கு இலகு தவணைக் காலத்தை வழங்கலும் அதுவரை மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருத்தல்.

• தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட சினிமா திரையரங்குகளில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் திசம்பர் மாதம் வரையான மின் கட்டணப் பட்டியல், அதன் பட்டியல் திகதியிலிருந்து 12 சமமான மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கலும் அதுவரை மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருத்தல்

• இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள தங்குமிடங்களுக்காக 2020 மார்ச் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை சேர்ந்துள்ள மின் கட்டணப் பட்டியல் 12 சமமான மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கலும் அதுவரை மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருத்தல்

04. சமுத்திரவியல் பயிற்சி நிகழ்ச்சியை திட்டமிட்டு வழங்குவதற்காக வரையறுக்கப்பட்ட சினெக் கம்பஸ் (தனியார்) நிறுவனம், இலங்கை துறைமுக அதிகாரயின் மஹாபொல துறைமுகம் மற்றும் சமுத்திரவியல் கல்வி நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுகங்கள் முகாமைத்தவம் மற்றும் ஆலோசனைச் சேவைகள் கம்பனி (SLPMCS) இற்கிடையேயான ஒத்துழைப்பு

துறைமுகம் மற்றும் கப்பல்துறை போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி மற்றும் வேகமான பரம்பலுக்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை தொழில் துறையில் ஈடுபடுத்தக் கூடிய அதிகூடிய திறன்கள் மற்றும் ஒழுக்கமுள்ள உழைப்புப் படையணி இருத்தல் வேண்டும். இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் செயற்படும் மஹாபொல துறைமுகம் மற்றும் சமுத்திரவியல் கல்வி நிறுவனம் தற்போது குறித்த பணிகளை மேற்கொண்டு வருகின்றது. துறைமுக சேவைகள் சார்ந்த மற்றும் வேறு சேவைகளை வழங்கும் நோக்கில் இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை கப்பல்கள் கூட்டுத்தாபனம், கொழும்பு கப்பல் கட்டுமான நிறுவனம், இலங்கை கப்பல்கள் பிரதிநிகளின் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட சிலோன் சிப்பிங் லைன் போன்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் வரையறுக்கப்பட்ட இலங்கை துறைமுகங்கள் முகாமைத்தவம் மற்றும் ஆலோசனைச் சேவைகள் கம்பனி நிறுவப்பட்டுள்ளது.

நாட்டில் கப்பல்துறை தொழிலை ஊக்குவித்தல், பாடநெறிக்காக உள்வாங்கப்படும் பயிலுனர்களுக்காக நிதி வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் வெளிநாடுகளின் இலங்கையைச் சேர்ந்த கப்பல்துறை தொழிலாளர்களை மேம்படுத்தல், போன்ற குறிக்கோள்களை அடைவதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை, மஹாபொல துறைமுகம் மற்றும் சமுத்திரவியல் கல்வி நிறுவனம், இலங்கை துறைமுகங்கள் முகாமைத்துவம் மற்றும் ஆலோசனைச் சேவைகள் கம்பனி மற்றும் சினெக் கம்பஸ் (தனியார்) நிறுவனத்திற்கும் இடையே அறிவுசார் மற்றும் வளங்களை பரிமாற்றிக் கொள்வதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சினெக் கம்பஸ் (தனியார்) நிறுவனத்துடன் ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு அதிகாரம் வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் சட்டங்களைத் திருத்தம் செய்தல்

கீழ்க்காணும் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்காக அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைகள், பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசியலமைப்பு பணிகள் தொடர்பான அமைச்சரவை உபகுழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த உபகுழுவால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, குறித்த சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலங்களைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

• குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் (தற்போது நடைமுறையிலுள்ள 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டம் மற்றும் அதற்கு ஏற்புடைய திருத்தங்களை முடிவுறுத்தி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தல்)

• 2006 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க முத்திரைக் கட்டணம் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 2011 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க மாகாண சபைகள் (முத்திரைக் கட்டணங்களை மாற்றுதல்) சட்டம்

• 2016 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டம்

• 1999 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டம்

• குற்றவியல் சட்டக் கோவையின் 53 ஆவது உறுப்புரையின் (சிறுபராயத்தவர்களுக்கான மரணதண்டனை வழங்கும் ஏற்பாடுகள்)

06. 2006 ஆம் ஆண்டு 06 ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைப்படுத்தல் சட்டம், 2006 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க நிதி மோசடி தடுப்புச் சட்டம் மற்றும் 2005 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தடுப்பு சட்டத்தை திருத்தம் செய்தல்

நிதி தொடர்பான செயலணியின் பரிந்துரைகள் மற்றும் நிதி மோசடி தடுப்பு தொடர்பான தேசிய ஒருங்கிணைப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட, சட்ட மீளாய்வு குழு மற்றும் நிதி மோசடி தொடர்பான ஆசிய பசுபிக் வலயக் குழுவால் அடையாளங் காணப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைப்படுத்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு 2010 மே மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த திருத்தச் சட்டமூலம் தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர், 2014ஃ2015 ஆம் ஆண்டுகளில் ஆசிய பசுபிக் வலயக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட பரஸ்பர மதிப்பாய்வின் போது, அதற்கு முன்னர் அடையாளங் காணப்பட்ட திருத்தங்களுக்கு மேலதிகமாக மேலும் திருத்தப்பட வேண்டிய சில திருத்தங்கள் கண்டறியப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் அலுவலகம், சட்டவரைஞர் திணைக்களம், நிதிப் புலனாய்வு பிரிவு, உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் 2017 மார்ச் மாதம் சர்வதேச நிதியத்தின் தொழிநுட்ப உதவிக் குழுவால் பரிசீலிக்கப்பட்டது. அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கீழ்க்காணும் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 2006 ஆம் ஆண்டு 06 ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைப்படுத்தல் சட்டம்

• 2006 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க நிதி மோசடி தடுப்புச் சட்டம்

• 2005 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தடுப்பு சட்டம்

07. சைகை மொழி சட்டத்திற்கான சட்டமூலத்தை தயாரித்தல்

சைகை மொழி ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியாக அங்கீகரிப்பதற்காக 2010 செப்ரெம்பர் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் குறிப்பிடத்தக்களவு செவிப்புலனற்றவர்கள் வாழ்கின்றமையால், அவர்களுடைய கல்வி தேவைகள், சட்ட அணுகுமுறைகள், சுகாதார வசதிகள், பலதரப்பட்ட அரச சேவைகள் மற்றும் தனியார் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது சைகை மொழியை அங்கீகரிக்கப்பட்ட தொடர்பாடல் ஊடகமாக ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பதன் மூலம் செவிப்புலனற்ற சமூகத்தவர்களை வலுவூட்ட முடியும்;. அதனால், இலங்கையில் சைகை மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியாக தாபிப்பதற்கு சட்டமூலமொன்று தயாரிக்கப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சைகை மொழியை முறையான தொடர்பாடல் ஊடகமாக அங்கீகரிப்பதற்கும், பொருத்தமான வகையில் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தேவையான ஏற்பாடுகளை தயாரிப்பதற்கும், அதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. குடியியல் வழக்கு சட்டக் கோவை திருத்தம் – திருமண வழக்கு

திருமண வழக்குகளில் ஏற்புடைய நடைமுறைகள் தொடர்பாகவுள்ள சில ஏற்பாடுகள் குடியியல் வழக்குச் சட்டக் கோவையில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதன் சில ஏற்பாட்டு உறுப்புரைகள் காலங்கடந்து நடைமுறைச் சாத்தியமற்றதாகக் காணப்படுகின்றமையால், வழக்கு நடவடிக்கைகளின் போது தாமதங்கள் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. குறித்த விடயங்களை கவனத்தில் கொண்டு, சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் குடியியல் வழக்கு சட்டக் கோவையை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. குற்றவியல் சட்டக் கோவை திருத்தம் (சட்ட ரீதியான பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை)

குற்றவியல் சட்டக் கோவையின் 363 ஆம் உறுப்புரையின் கீழ் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் கடுமையான குற்றச் செயலாக வரையறுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குற்றச் செயலின் கீழ் குறித்துரைக்கப்படும் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், சட்டரீதியாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைக்கு எற்புடைய சட்டத்தில் மாறுபாடுகள் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது. மேலும், இலங்கை சட்ட மருத்துவர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கற்கையில் சட்டரீதியாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு எற்புடைய குற்றவியல் சட்டக் கோவையிலுள்ள ஏற்பாடுகளை திருத்தம் செய்ய வேண்டிய தேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, சமகால நிலைமைகளுக்குப் பொருத்தமான வகையில் குற்றவியல் சட்டக் கோவைக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காகவும், சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. சிறிய தீவுகளில் இரட்டைரக மீள்பிறப்பாக்க எரிசக்தி தொகுதியை நிறுவுதல்

மின்சார சபையால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியனுசரணையின் கீழ் ‘மின்சாரம் வழங்கலில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு ஒத்துழைக்கும் கருத்திட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்கீழ் சமகால மின்சக்தி வலையமைப்பின் செயற்றிறனை அதிகரிப்பதற்காக கிடைப்பனவாகவுள்ள எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தி, நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவுகளில் இரட்டைரக மீள்பிறப்பாக்க எரிசக்தி தொகுதியை நிறுவுவதற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த ஒப்பந்தத்தை சீனாவின் M/s Sinosoar – Etechwin Joint Venture நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானங்கள் மற்றும் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தல்

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதவி வகித்த அரச உத்தியோகத்தர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிசாருக்கு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதற்கமைய, குறித்த அறிக்கையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காகவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களையும் சிபார்சுகளையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. நபர்கள் மீள் திரும்புதல் மற்றும் மீளப் பொறுப்பேற்றல் தொடர்பாக அவுஸ்திரேலியா பொதுநலவாய அமைப்பு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் குடிவரவு சட்டங்களை மீறி தங்கியிருக்கும் நபர்களை இரு நாடுகளுக்குமிடையில் பரிமாற்றிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கலாக புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் தமது சொந்த நாட்டிற்கு பாதுகாப்பாகவும் முறையாகவும் மீளச் செல்வதற்கான உறுதி வழங்கப்படும். அதற்கமைய, அவுஸ்திரேலியா பொதுநலவாய அமைப்பு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையில் நபர்கள் மீளத் திரும்புதல் மற்றும் மீளப் பொறுப்பேற்றல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.