வட மாகாணத்தில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரை 351 பேருக்கு கொரோனா தொற்று-கேதீஸ்வரன்

ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரை 351 பேருக்கு, வடக்கு மாகாணத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றையதினம்(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று வடக்கு மாகாணத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் 45 பேர் வவுனியா மாவட்டம் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள்.

அதில் 20 பேர் பட்டாணிச்சூர் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏனைய 25 பேரும் ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் முதல்நிலை தொடர்பில் இருந்தவர்கள்.

இத்தோடு சேர்த்து வவுனியா நகர் பகுதியிலே ஏற்பட்ட தொற்று பரம்பலில் இதுவரைக்கும் 244 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கு மேலதிகமாக நேற்று யாழ்ப்பாண மாவட்டம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் 5 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொழும்பிலிருந்து வந்து தங்கியிருந்த இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் பொது வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தட்டுள்ளது.

நேற்று மன்னார் பொது வைத்தியசாலையில் வடக்கு மாகாணத்தின் இரண்டாவது கொரோனா இறப்பு பதிவாகி இருக்கின்றது. மன்னார் மாவட்டம் உப்புக்குளம் கிராமத்தை சேர்ந்த 61 வயதான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரே உயிரிழந்துள்ளார் என மேலும் தெரிவித்தார் .

அத்தோடு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் வவுனியா மாவட்டத்தில் 234 பேரும், மன்னார் மாவட்டத்தில் 70 பேரும், யாழ்ப்பாணயில் 32 பேரும், கிளிநொச்சியில் 10 பேரும் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களுக்கு கடந்த வாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருக்கின்றது. அந்த சுற்றறிக்கையில் கொரோனா தொற்று கூடிய பகுதியில் இருந்து அபாயம் குறைந்த பகுதிக்கு வருகை தருவோரை தமது அனுமதியின்றி தனிமைப்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளது, சினிமா திரையரங்குகள் இயங்க ஆரம்பித்துள்ளது, வடமாகாணத்திலுள்ள சந்தைகளை மீளவும் பழைய இடங்களில் இயங்குவதற்கு அனுமதித்திருக்கின்றோம். திருமண மண்டபங்களில் ஆக கூடியது 150 நபர்களுடன் திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றோம், புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியிருக்கின்றன.

எனவே இப்படியான ஒரு சூழ்நிலையில், தொற்று அபாயம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இருந்து வருகை தருபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம் எனும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய ஒரு சூழ்நிலையிலே இந்த நோய் தொற்று பரம்பலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அத்தியாவசியமாக தேவைப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.